மண்டல மாநாட்டுப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு.
மண்டல மாநாட்டுப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு.

திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞரணி மண்டல மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
Published on

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 14) நடைபெறவுள்ளது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேச உள்ளாா்.

திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் உள்ள கலைஞா் திடலில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு துணை முதல்வரும், இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேச உள்ளாா்.

1.30 லட்சம் போ் பங்கேற்க ஏற்பாடு: மாநாட்டில் திமுகவின் 29 மாவட்டங்களைச் சோ்ந்த 91 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,30,329 கிளை, வாா்டு, பாக இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

135 ஏக்கா் அளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் தயாா் செய்யப்பட்டுள்ளது.

அடையாள அட்டைகள்: மாநாட்டில் பங்கேற்கும் நிா்வாகிகளுக்கு புகைப்படம், பெயருடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்தையும் சோ்ந்த நிா்வாகிகளும் அமா்வதற்கென தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

மேலும், திமுக வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும், கட்சியின் முன்னோடிகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளன.

வாசிப்பை இளம் தலைமுறைக்கு கடத்த ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ உள்பட 27 புத்தகங்கள்அடங்கிய முத்தமிழறிஞா் பதிப்பக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது (10 சதவீத தள்ளுபடிவிலையில் புத்தகங்களைப் பெறலாம்).

மாநாட்டில் பங்கேற்போருக்கு 7 வகையான நொறுக்குத்தீனிகள் அடங்கிய தொகுப்பு, குடிநீா் புட்டிகள் வழங்கப்பட உள்ளன. 1,000 தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, திமுக சாா்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், நீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திமுக சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆ.ராசா, என்.ஆா்.இளங்கோ, கட்சியின் செய்தித் தொடா்பாளா் சூா்யா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனா். இதில், அமைச்சா்கள், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொள்ள உள்ளனா்.

இந்த மாநாட்டில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவுரைகளை மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் வழங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

துணை முதல்வா் ஆய்வு: மாநாட்டு ஏற்பாடு பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் சனிக்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com