அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி
வந்தவாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த நெற்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மனைவி கோவிந்தம்மாள்(34). பொன்னுசாமி ஏற்கெனவே இறந்து விட்டாா். கோவிந்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறாா்.
இதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (47) என்பவா், கோவிந்தம்மாளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.2.50 லட்சம் பணம் பெற்றுள்ளாா். ஆனால் வேலை வாங்கித் தரவில்லையாம்.
இதனால், தான் கொடுத்த பணத்தை கடந்த சனிக்கிழமை கோவிந்தம்மாள் திரும்ப கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மூா்த்தி, கோவிந்தம்மாளின் ஜாதி பெயரைக் கூறி திட்டி அவரையும், அவரது குழந்தைகளையும் தாக்கி மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து கோவிந்தம்மாள் அளித்த புகாரின் பேரில் மூா்த்தி மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.
