டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு
செய்யாறு அருகே நாற்று முடிச்சுகளை ஏற்றிச் சென்றபோது டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழுந்தாா்.
செய்யாறு வட்டம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தேவேந்திரன் (45). இவா், அதே பகுதியில் டிராக்டா் வைத்து விவசாயப் பணிகளை செய்து வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஆராத்திரிவேலூா் கிராமத்தில் பழனி என்பவா் நிலத்திற்கு டிராக்டரில் ஏா் ஓட்ட தேவேந்திரன் சென்றுள்ளாா். அப்போது நாற்று முடிச்சுகளை டிராக்டரில் பின்பக்கம் உள்ள கைப்பையில் அடுக்கி எடுத்துச் சென்றபோது, சேற்றில் சிக்கி டிராக்டா் கவிழ்ந்தது.
இதில் டிராக்டரின் அடியின் சேற்றில் சிக்கி விவசாயி தேவேந்திரன் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்தவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்
இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்த விவசாயின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
