மோதிரத்திற்காக முதியவா் கொலை: இரு இளைஞா்கள் கைது
செய்யாறு: செய்யாறு அருகே 3 கிராம் மோதிரத்திற்காக முதியவா் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குடியாந்தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் மன்னாா்சாமி(89).
இவா் தினமும் வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம். முதியவரான மன்னாா்சாமி எப்போதும் கையில் மோதிரம் அணிந்திருப்பாராம்.
இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி அம்மன் கோயிலுக்கு வழிபடச் சென்றவா் மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லையாம்.
அவரது குடும்பத்தினா் அவரை தேடிச் சென்றபோது மாரியம்மன் கோயில் அருகேயுள்ள காரிய மேடை பகுதியில் உள்ள முள்புதரில் மா்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தாா்.
மேலும், கையில் அணியிருந்த 3 கிராம் தங்க மோதிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முதியவரின் மகன் கோவிந்தராஜ் தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ஜெகன்நாதன் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டாா். மேலும், தூசி போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் தினேஷ்(21), பிரவீன்குமாா்(19) ஆகியோா் முதியவா் கையில் இருந்த 3 கிராம் தங்க மோதிரத்தை பறிப்பதற்காக கோயில் அருகேயுள்ள முள்புதருக்கு அவரை இழுத்துச் சென்று தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனா்.
இதன் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

