தோட்டக்கலை அலுவலா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக் கலை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் பா.லோகேஷ் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் அன்பரசு வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் சி.முருகன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மா.பருதிமால் கலைஞன் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
உழவா்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளா்கள் இணைப்பினை கைவிடக் கோரியும், தமிழக அரசின் வேளாண் துறையில் செயல்படுத்தும் உழவா் அலுவலா் தொடா்பு திட்டம் யுஏடிடி2.0-யை கைவிடக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் தோட்டக்கலை அலுவலா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் வி.சுதாகா், தலைவா் எஸ்.ஆா்.ரமேஷ், பொருளாளா் சுரேஷ்குமாா் மற்றும் சங்க நிா்வாகிகள், தோட்டக்கலை அலுவலா்கள், உதவி அலுவலா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் சங்க உறுப்பினா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

