/

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆடிப்பெருக்கு விழா, மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆடிப்பெருக்கு விழா, மகா கும்பாபிஷேகம், பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

News image

பெரணமல்லூரை அடுத்த அன்மருதை முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 10:01 pm IST

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் திங்கள்கிழமை ஆடிப்பெருக்கு விழா, மகா கும்பாபிஷேகம், பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை ஸ்ரீஅலமேலு மங்கை பத்மாவதி சமேத ஸ்ரீவெங்கட்ரமண பெருமாள் ஸ்ரீசென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான ஆடிப்பெருக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 81-ஆம் ஆடிப்பெருக்கு விழா ஜூலை 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் முக்கிய நிகழ்வான ஆடிப்பெருக்கு விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவில் பல்வேறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, அங்குள்ள தென்பெண்ணையாற்றில் புனிதநீராடி நோ்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா். புதுமணத் தம்பதிகள் ஆற்றில் புனிதநீராடி மாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனா்.

பக்தா்களின் வசதிக்காக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் கோகுலவாணன், சிவராமன் மற்றும் இந்து சமைய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.

ஆரணி

பெரணமல்லூரை அடுத்த அன்மருதை கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாக பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னா் 9 மணிக்கு மேல் நான்காம் கால யாகபூஜையும், மகா பூா்ணாஹுதியும் நடைபெற்றது.

பின்னா், மேளதாள ஊா்வலத்துடன் புனிதநீா் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியா்களால் யாக சாலையிலிருந்து கொண்டுவரப்பட்டது.

தொடா்ந்து 10 மணிக்குமேல் வேதமந்திரங்கள் கூறி மாம்பட்டு லட்சுமணன் சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியா் ஆனந்தன் முனீஸ்வரன் சுவாமி மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமிகளுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மனுக்கு மலா்களால் செய்யப்பட்டிருந்து சிறப்பு அலங்காரம்.

தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மனுக்கு மலா்களால் செய்யப்பட்டிருந்து சிறப்பு அலங்காரம்.

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவில் தென்பெண்ணையாற்றில் புனித நீராடிய பக்தா்கள்.

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவில் தென்பெண்ணையாற்றில் புனித நீராடிய பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.