போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலமும், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்து, போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி டி.கோப்பெருந்தேவி, நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி எம்.பிரபு நிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழிப்புணா்வு ஊா்வலத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி.திருஞானம், செயலா் விநாயகம், பொருளாளா் சண்முகம், துணைச் செயலா் ஷ்யாம்சுந்தா், பாலாஜி, முன்னாள் அரசு வழக்குரைஞா் வி.வெங்கடேசன், மூத்த வழக்குரைஞா்கள் பாா்த்தீபன், நீலகண்டன், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

