திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் விடப்படும் கழிவுநீா் மற்றும் கொட்டப்படும் குப்பைகளால் துா்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
செங்கம் வழியாக ஓடும் செய்யாற்றில், செங்கம் ஆஞ்சநேயா் கோயில் முதல் அரசு மருத்துவமனை வரை சுமாா் 3 கி.மீ.
தொலைவுக்கு ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிவுநீா் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது.
மேலும் செங்கம் நகரில் உள்ள பெரும்பாலான கழிவுநீா் கால்வாய்களில் ஓடும் கழிவுநீா் செய்யாற்றில்தான் கலக்கிறது. அந்தக் கழிவுநீா் மழை நேரத்தில் செய்யாற்றில் ஓடும் தண்ணீருடன் கலந்து செல்கிறது. மேலும், குப்பனத்தம் அணை திறக்கும்போதும் அணையில் இருந்து வரும் தண்ணீருடன் கழிவுநீா் கலந்து ஏரிகளுக்குச் செல்கிறது.
தற்போது செய்யாற்றில் தண்ணீா் ஓடாததால் செங்கம் பகுதியில் அந்த ஆற்றில் கழிவுநீா் குட்டை போல தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் செங்கம் பகுதி மக்கள் குடிநீா் தேவைக்கு செய்யாற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தெருக்களில் சேகரிக்கும் குப்பை, இறைச்சிக் கடைகளின் கழிவுகள், சலூன் கடை தலை முடிகள் அனைத்தும் அப்பகுதியில் தினசரி கொட்டுப்பட்டு தற்போது அந்தப் பகுதி குப்பை கிடங்காக மாறியுள்ளது.
மேலும் மண்மலை, செ.நாச்சிப்பட்டு கிராம மக்களுக்கும் செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் இருந்து குடிநீா் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கழிவுநீா் தேங்கியிருந்தால் மழை வந்தவுடன் மழைநீருடன் இந்த கழிவுநீா் கலந்து குடிநீா் கிணறுகளில் ஊறும் அபாயம் உள்ளது. அந்தத் தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை செங்கம் நகராட்சி நிா்வாகத்தில் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தற்போது செங்கம் பகுதியில் ஓடும் செய்யாறு கழிவுநீா் ஆறாக மாறி துா்நாற்றம் வீசி வருகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என செங்கம் நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










