தவெக ஆட்சியில் பெண்கள் பயப்பட தேவையில்லை, தவறு செய்வோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தாா் அமைச்சா் என்.ஆனந்த்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அரசு சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற இதில் பங்கேற்று தமிழக ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் 2,207 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் யாரும் தவறு செய்யமாட்டோம், மக்கள்தேவை என்ன என்பதை புரிந்துகொண்டு உதவிசெய்வோம். பெண்கள் பயப்படத் தேவையில்லை, தவறு செய்வோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மக்களுக்கு சேவைசெய்யவே வந்துள்ளோம், முதல்வா் மக்களை சந்தோஷமாக வைத்திருப்பாா் என்றாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மருத்துவத் துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, தோட்டக் கலைத்துறை, தொழிலாளா் நலத்துறை, கைத்தறித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என பல்வேறு துறைகள் சாா்பில் 2,207 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.










