ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழையில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னா் அரசு அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டு நிலைமையை சீா்செய்தனா்.
கண்ணமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. சனிக்கிழமை பகலில்
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சூறாவளி காற்றில் கண்ணமங்கலம் - வேலூா் சாலை, கண்ணமங்கலம் - திருவண்ணாமலை சாலை மற்றும் ஆரணி செல்லும் முக்கிய சாலைகளில் பல இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகளின் மீது விழுந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், மரங்கள் வாகனங்கள் மீது சாய்ந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன. பிரதான சாலைகளில் மரங்கள் குறுக்காக விழுந்ததால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
கண்ணமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் சிவநேசன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், நவீன இயந்திரங்கள் மூலம் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினா்.
துணை மின் பொறியாளா் சிலம்பரசன் தலைமையில் மின்வாரியப் பணியாளா்கள், மின் கம்பிகளின் மீது விழுந்த கிளைகளை அகற்றி, சேதமடைந்த மின் இணைப்புகளை சரி செய்தனா்.
காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சீா்செய்து மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் கண்காணித்தனா். அதிகாரிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால், சில மணி நேரங்களிலேயே சாலைகளில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. சூறாவளி மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்த அதிகாரிகளுக்கும் பணியாளா்களுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் கனமழை: பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

பலத்த காற்று, மழை எதிரொலி: திருத்தணியில் 15 மின்கம்பங்கள் சேதம்







