எக்காலத்திலும் வற்றாத கொண்டப்பட்டியான் சுனை ஏரி!

ஆம்பூர் அருகே மலை மீது எந்தக் காலத்திலும் வற்றாத நீர் வரும் கொண்டப்பட்டியான் சுனை ஏரி அமைந்துள்ளது.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே மலை மீது எந்தக் காலத்திலும் வற்றாத நீர் வரும் கொண்டப்பட்டியான் சுனை ஏரி அமைந்துள்ளது.
 வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது பைரப்பள்ளி கிராமம். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஊட்டல் தேவஸ்தானத்தின் கிழக்கே 4 கி.மீ. தொலைவிலும் பிக்கல மலையும், ஜவ்வூட்டல் மலையும் உள்ளன.
 இவற்றுக்கு இடையே பரந்த பாறை பகுதியில் அமைந்துள்ளது கொண்டப்பட்டியான் சுனை ஏரி. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஏரி, ஊட்டல் காப்புக் காட்டின் அதிசயம் என்று கூறப்படுகிறது.
 பழங்காலத்தில் ஆந்திர எல்லை பகுதியைச் சேர்ந்த கொண்டப்பட்டி ரங்கைய நாயுடு வம்சத்தால் எந்தக் காலத்திலும் வற்றாத நீர் வரும் சுனை பகுதியைப் பார்த்து முறையானக் கட்டமைப்போடு உருவாக்கப்பட்டதால், இது கொண்டப்பட்டியான் சுனை என்று அழைக்கப்படுகிறது.
 இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. சுனையின் இரு பக்கமும் மேடான பாறையும், கட்டுக்கற்களாலும் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. 10 அடி அகலத்திலும், 100 மீட்டர் நீளத்திலும் உள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் பல்வேறு நீர்நிலைகள் வறண்டு காணப்படும் நிலையில், மலையின் மேல் வனவிலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும் வரப் பிரசாதமாய் இந்த ஏரி அமைந்துள்ளது.
இப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் மதிய வேளைகளில் தண்ணீர் தாகம் தீர்க்க இங்குதான் செல்வதாகக் கூறப்படுகிறது. சுற்றுப்புற காடுகளில் வாழும் வனவிலங்குகள் இங்கு சென்று நீர் அருந்தி தாகத்தை தீர்த்து வருகின்றன.
கொண்டப்பட்டியான் சுனை ஏரியை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட பாறை குடில்கள் உள்ளன. பாறை குடில்கள் மேல் உள்ள பாறைகளின் எடை மட்டும் 2 முதல் 3 டன் இருக்கும். ஏரி கட்டப்பட்ட காலத்திலேயே இந்த பாறை குடில்களும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கிராமப் புறங்களில் ஏரி, குளம், குட்டை ஆகியவை நீரின்றி வறண்டு கிடக்கின்றன. ஆனால், மலை மேல் உள்ள மாறாத சூழலுடன் நீர் நிரம்பி காட்சி அளிக்கிறது கொண்டப்பட்டியான் சுனை ஏரி.
அதே சமயம் வனத் துறையினர் இந்த நீர்நிலையைத் தூர் வாரினால் மிகவும் அதிகமான தண்ணீரை சேமிக்க ஏதுவாக இருக்கும்.  மேலும், வனப் பகுதியில் நீர்நிலைகளை மேம்படுத்த கசிவுநீர் குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், தண்ணீர் தொட்டிகள் அமைத்தல், கைப்பம்புகள் அமைத்தல், சோலார் பம்பு செட்டுகள் அமைத்தல் என வனத் துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டாலும், முழுமையாக பயன் தராமல் உள்ளன.
பழங்காலத்திலேயே ஏற்படுத்தப்பட்ட கொண்டப்பட்டியான் சுனை ஏரி போன்ற நீர்நிலைகளைத் தூர்வாரி மேம்படுத்தினாலே பயன் உள்ளதாக இருக்கும். மேலும், ஏரியை சுற்றி உள்ள பாறை குடில்களை முறையாக பேணி பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com