முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் பெருமிதம் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை காரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டு 92 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:
காரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் 77 சதவீதமும், பிளஸ் 2 மாணவர்கள் 78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வாழும். தமிழகத்தில் இன்னும் எத்தனைக் கட்சிகள் வந்தாலும் அந்தத் திட்டங்களை யாராலும் மாற்ற முடியாது. ஏனெனில் இவை அனைத்தும் ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வரும் சிறந்த திட்டங்களாகும்.
அதே போல், கிராமப்புற பள்ளி மாணவர்கள் பொருளாதார சூழல் காரணமாக இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் 14-க்கும் மேற்பட்ட இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில், முக்கியமானது இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மடிக்கணினியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள், கல்லூரிக்கு போகும் போது தான் தெரியவரும். மடிக்கணினியை பயன்படுத்தி உலக அளவில் சிறந்த மாணவர்களாக வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து அரக்கோணம் எம்.பி. கோ. அரி பேசினார்.
விழாவுக்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான கே.பி.சந்தோஷம் தலைமை வகித்தார். நகர அதிமுக செயலாளர் என்.கே.மணி, முன்னாள் நகர மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் கணபதி வரவேற்றார்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.ஏழுமலை, வாலாஜாபேட்டை நகரச் செயலாளர் ஜி.மோகன், ஜம்புகுளம் கூட்டுறவு வங்கித் தலைவர் பெல்.ச.கார்த்திகேயன், வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலாளர் எம்.சி. பூங்காவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காரை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தயாளன் நன்றி கூறினார்.
ஆற்காட்டில்...
மேல்விஷாரம் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
123 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி நீலோபர் கபில் பேசியதாவது:
இளம் வயதில் செய்ய நினைப்பதை செய்து முடிக்க வேண்டும். நாளை என்பது இயலாதது. நல்லவற்றை அன்றே செய்ய வேண்டும். படிக்கும் வயதில் படிக்காமல் பிற்காலத்தில் வருத்தப்படக் கூடாது. எதையும் புறக்கணிக்காமல் அனைத்துப் பாடங்களையும் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்குகிறது. அவற்றை மாணவர்கள் பயன்படுத்தி நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியை ஷாயித் உன்னிஷா வரவேற்றார். முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் சி. ஏழுமலை, மேல்விஷாரம் நகரச் செயலாளர் இப்ராஹீம் கலிலுல்லா, முன்னாள் நகர மன்றத் தலைவர் அப்துல் ரஹ்மான், மில்லத் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் இம்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நீலோபர் கபில் கூறியதாவது:
உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமிய மாணவர்கள் தமிழ், ஆங்கில ழொழிகளில் தேர்வு எழுத சிரமப்படுகின்றனர். இதனால் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. திமுக ஆட்சியில் மாணவர்கள் உருது மொழியில் தேர்வு எழுதுவது ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் கிருபானந்தராஜ் தலைமை வகித்தார். நகர அதிமுக செயலாளர் சதாசிவம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டு 123 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி பேசினார். இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல இசுலாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 728 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிகளை அமைச்சர் வழங்கினார்.
இசுலாமிய பெண்கள் கல்லூரிச் செயலாளர் அப்துல்ஹலீம், முகமது நரிநயீம், பள்ளி நிர்வாகிகள் நிசார்அகமது, மகீன், வகீத், நாசீர்ஜமால், பள்ளி முதல்வர்கள் ஷர்மிளா, அப்துல்ஹாதி, நகர வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பிரகாசம், பசூலூர் ரகுமான், ஆசீப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்...
தமிழகத்தில் இலவச மடிக்கணினி திட்டத்துக்காக ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அரக்கோணம்
எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார்.
அரக்கோணம் தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
உலக நாடுகளிலேயே ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை இலவசமாக தரும் ஒரே அரசு தமிழக அரசு மட்டுமே. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் இது.
உத்தரப் பிரதேசத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி ஒரே ஆண்டில் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டுமே இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மடிக்கணினி திட்டத்துக்கு ரு. 750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் தொகுதியில் 17 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 20 கோடி நிதியில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. கல்வித் துறையைப் பொருத்த மட்டில் மாவட்டத்திலேயே அரக்கோணம் தொகுதி அபார வளர்ச்சி பெற்றுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரோன் ஜஸ்டின்சாமுவேல் தலைமை வகித்தார். நகரக் கூட்டுறவு வங்கியின் தலைவர் துரை குப்புசாமி, பொதுக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகரமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வம், குருவராடபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன், காவேரிபாக்கம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் பழனி, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சாலமன் ஞானஒளி, மாவட்ட நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் அற்புதராஜ், ஆசிரியர் இன்பசெல்வம், ஏசுபாதம் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.