அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் அரசுக்கு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும் என தான்சானியா நாட்டின் உயர் ஆணையர் பராக்கா ஆரன் லுவாண்டா தெரிவித்தார்.
வேலூர், விஐடி கணினி அறிவியல், பொறியியல் பள்ளி சார்பில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் 2 நாள்கள் நடைபெற்றன. இதில், தான்சானியா நாட்டின் உயர் ஆணையர் பராக்கா ஆரன் லுவாண்டா பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்தும், கருத்தரங்க குறுந்தகட்டை வெளியிட்டும் பேசியதாவது:
விஐடியில் ஒவ்வொரு பருவத்திலும் நடத்தப்படும் இந்த கருத்தரங்கம் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு வளர்ந்துவரும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மேலாண்மை, மானுடவியல் ஆகியவற்றில் புதிய அறிவுத்திறனை அளிப்பதாக விளங்குகிறது. நாட்டில் ஆராய்ச்சி இதழ்களை வெளியிடுவதில் வளர்ந்து வரும் விஐடி, அதற்கேற்ற வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. இந்த கருத்தரங்கம் ஆராய்ச்சி அறிவை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பாகவும், அளவுகோலாகவும் அமைந்துள்ளது.
சமீபத்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனதில் ஏற்படும் அச்சத்தை, குழப்பத்தை கடந்து செல்லும் வகையில் உள்ளது. இணைய தளம், செல்லிடப்பேசி ஆகியவை அறிவு, ஆற்றலை வளர்த்துக் கொள்ள பாதையாக அமைந்துள்ளன. அதேபோல், வங்கி முறைகளை எளிதாகக் கையாளும் வகையிலும் உள்ளது. மேலும், ஏடிஎம் வசதி, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக உடனடி பணம் பெறுவது, வங்கிக் கணக்கு பராமரிப்புக்காக வங்கிகளுக்கு செல்லாத வசதி ஏற்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் தூய்மை தொழில்நுட்பத்துக்கு மிகப்பெரிய பகுதியாக அமைந்துள்ளது. உயிரி எரிபொருள், சூரிய சக்தி, காற்றாலை சக்தி, மாற்றத்தக்க எரிபொருள் உற்பத்தியானது சுற்றுச்சூழலுக்கு நண்பனாக உள்ளது. அத்துடன் அரசுக்கு அரசின் அதிகபட்ச செலவினத்தை குறைப்பதாகவும் உள்ளது. எனவே, அறிவுசார்ந்த கண்டுபிடிப்புகள் அரசுக்கு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.
தென்னாப்பிரிக்க நாட்டின் ஸ்டெல்லன் போஸச் பல்கலைக்கழகத்தின் ராணுவ அறிவியல் பேராசிரியர் ஓ.டி. மஹின்டி பேசுகையில், இந்தியாவில் கல்வி வழங்கும் முறை சிறப்பாக உள்ளது. விஐடி கல்வி வழங்குவதிலும், ஆராய்ச்சிப் பணிகளிலும் சிறப்பு பெற்றுள்ளதைக் காண முடிகிறது என்றார்.
முன்னதாக, கருத்தரங்க தொடக்க விழாவுக்கு, விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை வகித்துப் பேசியதாவது: இணையதள தகவல்களை பறிமாறி கொள்வது எளிதாகி உள்ளது. செல்லிடப்பேசி மூலமாக எந்தவொரு தகவலையும் பறிமாறிக் கொள்ள முடியும். அதேசமயம், இணையதள வசதியை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தகவல்களை சேகரிப்பதில் எளிதான சாதனமாக இணையதளம் இருந்தாலும், அதைப் பதிவு செய்வதிலோ, பிறருக்கு பகிர்வு செய்வதன் மூலமாகவோ பிரச்னைகள் உருவாகலாம். அப்படி பகிர்வதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், அறிவு சார்ந்தவர்கள் மிரட்டப்படும் நிலை உள்ளது.
விஐடி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ஒரே மாதிரியான பணிகளுக்கு மாற்றாக பல்வேறு மாணவர் கிளப்ஸ், சேப்டர்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் வடிவமைத்தல், கண்டுபிடிப்புகள் விவாத ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றார்.
முன்னதாக, விஐடி கணினி அறிவியல் தொழில்நுட்பப் பள்ளி முதல்வர் ஆர்.சரவணன் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேராசிரியர் ஏ.நாகராஜாராவ் விளக்கினார். கருத்தரங்கில், விஐடி இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பேராசிரியைகள் ஜெரால்டின் பெஸ்சிஅமலி, ஷர்மிளா பானு, எச்.சாந்தி, 300 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








