நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு சதுப்பு நிலங்கள் எனும் ஈர நிலங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்று திருப்பத்தூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சீ.முரளீதர் தெரிவித்தார்.
உலக ஈர நிலங்கள் தினம் வேலூர், கி.வ.குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இதில்,ஒருங்கிணைப்பாளர் சீ.முரளீதர் பங்கேற்று பேசியதாவது:
உயிரினங்கள் வாழக்கூடிய இந்த பூமி கடலால் 70 சதவீதம் சூழப்பட்டுள்ளது. நம்மை முழுவதுமாக சுற்றியுள்ள தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீராகவும் , 2 சதவீதம் பனிக் கட்டியாகவும் பயன்படுத்தாத நிலையில் உள்ளன. மீதமுள்ள ஒரு சதவீதம் நன்னீரைத்தான் மனிதஇனம் பயன்படுத்த முடியும். உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள், உயிரினங்களும் இந்த தண்ணீரை நம்பியே வாழ்கின்றன. உலகில் மாறாமல் இருப்பது தண்ணீர் மட்டுமே.
உடலில் உள்ள சிறுநீரகத்தை போல் அழுக்கை உறிஞ்சி தண்ணீரை சுத்தப்படுத்தும் பணியை ஈர நிலங்கள் எனப்படும் சதுப்பு நிலங்கள் செய்து வருகின்றன. ஒரு ஹெக்டேர் ஈர நிலம் என்பது ஒரு ஹெக்டேர் சாதாரண நிலத்தைப்போல் 58 மடங்கு பயனுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு சதுப்பு நிலங்கள் பெறும் பங்காற்றுகின்றன. தண்ணீர் மாசுபடுவதாலும், அழிக்கப்படுவதாலும் மீன் இனங்கள், புழுப் பூச்சிகள், நுண்ணுயிரிகள், நீர்நிலை வாழ் உயிரினங்கள் அழிந்து போகின்றன. இவற்றை உணவாக உண்டு வாழும் பறவைகளும் அழிவைச் சந்திக்கின்றன.
இதற்கான விழிபுணர்வை ஏற்படுத்தவே 1997 பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக ஈர நிலங்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி "நகர்புற நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு ஈரநிலம்' என்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புறத்திலுள்ள ஈரநிலங்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், குடிநீர் வழங்குதல், கழிவை முறைப்படுத்துதல், பசுமைப்பகுதி, உயிரின வாழ்வுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டை கொண்டுள்ளதாக விளங்குகின்றன.
பயனற்ற நிலமாக அல்லாமல் நகர்புறத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், திட்டமிடுதலுக்கும், நகர்புற ஈர நிலம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.சித்ரா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை ஜி.சங்கீதா, ஜி.பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி தமிழாசிரியர் ஜி.சீனிவாசன் வரவேற்றார். ஜங்காலப்பள்ளி மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அ.செலஸ்டின்தாஸ் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.