வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் வணிகர்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், வேலூர் மாநகர கடை வணிகர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். மனுவில், வேலூர் மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, நியாயமான கடை வாடகை உயர்வை ஏற்றுக் கொள்கிறாம். ஆனால், ஈரோடு, மதுரை, தாராபுரம், மாயவரம் ஆகிய பகுதிகளில் கடைக்கான வாடகை உயர்வு 25 சதவீதம் உயர்த்தியதுபோல் அல்லாமல், 500 முதல் 1,500 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபரிமிதமான வாடகை உயர்வை பலமுறை சுட்டிக்காட்டியும், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே, மாநகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்த உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், தாழையாத்தம் கிராமத்தில் 30 கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாக விளங்கும் தங்கம் நகர், மீனாட்சியம்மன் நகருக்கான பிரதான சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இச் சாலையை சீரமைக்க ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன்கருதி அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையேல், ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 445 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், பயிற்சி ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.