கரும்புக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் உரிய காலத்தில் வழங்காததால், விவசாயிகள் கரும்புகளை அரக்கோணம் வட்டாரத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டாரத்தில் பயிரிடப்படும் கரும்புகள் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பிய விவசாயிகளுக்கு அதற்கான தொகையை தராமல் ஆலை நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை என்கின்றனர்.
மேலும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் அசலுடன் வட்டி சேர்ந்து கொண்டே போவதால் கரும்பு விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து நடப்பு ஆண்டு கரும்பு விவசாயிகள் திருத்தணி சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப மறுத்து வருகின்றனர்.
இதில், பலர் கரும்புகளை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே பழையசீவரத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வந்தனர். தற்போது திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநில ஆலைகளுக்கு அதிகளவு கரும்புகள் கொண்டு செல்லப்படுவதால் கொள்முதல் விலையை அந்த ஆலை நிர்வாகத்தினர் குறைத்து விட்டனர்.
இதனால், அங்கும் கரும்புகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய சீவரத்தில் உள்ள தனியார் ஆலையும் சர்க்கரை உற்பத்தியை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அரக்கோணம் வட்டம், தணிகைபோளூர் ஊராட்சியில் பல ஏக்கர்களில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயி பிரவீண்குமார், சொந்தமாக வெல்லம் தயாரிக்கும் ஆலையை அதே ஊராட்சிக்கு உள்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் சிறிய அளவில் நிறுவினார்.
தனது சொந்த கரும்புகளைக் கொண்டு வெல்லம் தயாரித்து வந்த அவர், தற்போது அரக்கோணம் வட்டாரத்தின் பல விவசாயிகள் தங்களது கரும்பை எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுத்ததால் அந்த ஆலையை முழுநேர வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலையாக மாற்றியுள்ளார்.
இங்கு பெறப்படும் கரும்புகளுக்கு அன்றைய தினமே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் கரும்புகளை அனுப்பி வருகின்றனர்.
ஒரு பிரிவில் மூன்றரை டன் வெல்லம் என இரு பிரிவாக இயங்கும் இந்த ஆலையில் தினமும் ஏழு டன் வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
இங்கு பெண்கள் உள்பட 18 தொழிலாளர்கள் 3 ஷிப்டுகளாகப் பணிபுரிகின்றனர். கரும்பு பிழிதல், கரும்புச் சாறைக் கொண்டு செல்லுதல், அதை வெல்லத் தயாரிப்பு கொப்பரையில் கொட்டுதல் என பணிகள் அனைத்தும் மின்மோட்டார்கள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.
வெல்லத்தை கைகளால் உருட்டும் பணியாளர்கள், அவற்றை மூட்டைகளில் கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர். வெல்லம் தயாரிக்கும் கொப்பரைக்கான கொதிகலனுக்கு தேவையாகும் எரிபொருளும் கரும்பு சக்கை என்பதால் எரிபொருள் செலவும் இல்லை.
இதுகுறித்து அந்த ஆலையின் உரிமையாளர் பிரவீண் கூறியது:
நாங்கள் தயாரிக்கும் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தற்போது சென்னை கோயம்பேடு, ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
வேலூர் வெல்ல மண்டிகளுக்கு அனுப்ப ஏதுவான வெல்லம் தயாரிப்புப் பணியை விரைவில் தொடங்கவுள்ளோம். கரும்புகளை பெற்றுக் கொள்ளும் ஆலைகள் கொள்முதல் பாக்கியை வழங்காததால் இந்த முடிவுக்கு வந்தோம்.
தற்போது அரக்கோணம் வட்டாரத்தில் இருந்து எங்கள் ஆலைக்கு கரும்புகள் வருகின்றன. விரைவில் பக்கத்து வட்டாரங்களில் இருந்தும் கரும்புகள் வரும் என்றார் அவர்.
அரக்கோணம், நெமிலி, திருத்தணி வட்டாரங்களில் எங்குமே வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இல்லாத நிலையில், அரக்கோணம் அருகே தொடங்கப்பட்டுள்ள இந்த வெல்லம் தயாரிப்பு ஆலை விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரும்புக்கு ஒரு டன்னுக்கு ஆலையில் எவ்வளவு பணம் தருகிறார்களோ அதே பணத்தை கரும்பு இறங்கிய உடனே விவசாயிகளுக்கு தருவதால் பலர் வெல்லம் தயாரிப்புக்கு கரும்பை அனுப்ப முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.