பிளஸ் 2 பொதுத் தேர்வு: மாவட்டத்தில் 41,461 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை 41,461 மாணவ, மாணவிகள் எழுதினர். காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்


வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை 41,461 மாணவ, மாணவிகள் எழுதினர். காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பார்வையிட்டார்.
மாநிலம் முழுவதும் 2017-18-ஆம் கல்வியாண்டின் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 171 பள்ளிகளைச் சேர்ந்த 9,519 மாணவர்கள், 11,398 மாணவிகள் என மொத்தம் 20,917 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 184 பள்ளிகளைச் சேர்ந்த 9,761 மாணவர்கள், 10,783 மாணவிகள் என மொத்தம் 20,544 பேரும் என மொத்தம் 41,461 பேர் தேர்வு எழுதினர். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 154 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் 44 பேர் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வு பணிகளில் 154 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 154 துறை அலுவலர்களும், 2,250 அறைக் கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டிருந்தனர். மேலும், தேர்வுகளைக் கண்காணிக்க 250 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு செல்லிடப்பேசி எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் தேர்வு மையத்துக்கு உரிய நேரத்தில் செல்ல பேருந்து வசதியும், தேர்வு அறைகளுக்கு தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டிருந்தது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், தேர்வு மைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம், மார்ச் 1: அரக்கோணம் நகரில் அமைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு மையங்களில் அரக்கோணம் வட்டாட்சியர் வேணுகோபால் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அரக்கோணம் நகரில் தூயஅந்திரேயர் மேல்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை தமிழ் முதல் நாள் தேர்வுகள் நடைபெற்றன.
இம்மையங்களில் அரக்கோணம் வட்டாட்சியர் வேணுகோபால் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த அறைகளில் போதுமான வெளிச்சம் இல்லாததை வட்டாட்சியர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து கூடுதலாக மின் விளக்குகள் உடனே அமைக்க ஏற்பாடு செய்வதாக மையக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், இப்பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர், அவருக்கு தேர்வு எழுதுவதற்கு உதவ அரசால் நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதிக் கொண்டிருந்ததையும் வட்டாட்சியர் பார்வையிட்டார். வட்டாட்சியருடன் மண்டலத் துணை வட்டாட்சியர் சரவணமுத்து உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...