தீ தடுப்புப் பாதைகள் அமைக்கப்படுமா?

வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகள் தீப் பிடித்து எரிவதைத் தடுக்க தீ தடுப்புப் பாதைகள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வன ஆ
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகள் தீப் பிடித்து எரிவதைத் தடுக்க தீ தடுப்புப் பாதைகள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வன ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. அதே நேரத்தில் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் சுமார் 5,922 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும்.  இதில் வனப்பகுதி 1,743 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் வனக்கோட்டங்களாக வனப்பகுதி நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.  வேலூர் வனக்கோட்டத்தில் 100272.220 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. அதில் 99,736.415 ஹெக்டேர் பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. 535.805 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்பரப்பு உள்ளது.
திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் 75,052.520 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. 71,126.605 ஹெக்டேர் பரப்பளவில் காப்புக்காடுகளும், 3,925.915 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்பரப்பும் உள்ளன. வேலூர் வனக்கோட்டத்தில் வேலூர், ஆற்காடு, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஒடுக்கத்தூர், அமிர்தி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.  திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், சிங்காரப்பேட்டை, ஆலங்காயம் ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளன. 
திருப்பத்தூர் வனச்சரகத்தில் உள்ள சந்தனமரக் கிடங்கு இந்தியாவிலேயே புகழ்பெற்றதாகும். வேலூர் அமிர்தி வன விலங்கு சரணாலயம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வனப்பகுதிகள் தீப் பிடித்து எரிவது வழக்கம். 
இதனால் பல ஹெக்டேர் பரப்பளவு காடுகள் எரிந்து அதில் உள்ள மரங்களும் தீயில் கருகிவிடுகின்றன. இது சமூக விரோதிகளால் வேண்டுமென்றே தீ வைத்து எரிக்கப்படுகின்றது.  விறகு கரிக்காக இத்தகைய தீ வைக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கோடைக் காலங்களில் தான் அடிக்கடி நடைபெறுகின்றது. காடுகள் தீப் பிடித்து எரியும் போது அங்கு வசிக்கும் வன விலங்குகளும் பாதிப்பு ஏற்படுகிறது. காடுகள் தீப் பிடித்து எரிந்து அதன் மூலம் உருவாகும் சாம்பல் காற்றில் பறந்து அருகில் உள்ள கிராமங்கள், நகரப் பகுதிகளில் படிந்து மாசு ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக பிற்பகலில் வனப்பகுதி எரியத் தொடங்கி இரவெல்லம் எரிந்து கொண்டேயிருக்கும். காடுகளுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் வனப்பகுதியில் ஏற்படும் தீயை அணைப்பது என்பது இயலாத காரியமாகும்.  தானாகவே எரிந்து முழுவதும் சாம்பலாகி தீ தொடர்ந்து பரவக்கூடிய சூழ்நிலை இல்லாத போது தான் தீ தானாகவே அணையும்.  
பச்சை இலை, தழைகளை கொண்டு வனத்துறைப் பணியாளர்களால் தீ அணைக்கப்படுகிறது என்று வனத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் அவ்வாறு தீயை முழுமையாக அணைப்பது கடிணமான ஒன்று. 
காட்டு வழியாக செல்வோர் புகைபிடித்து விட்டு கீழே போடப்படும் தீயினால் தான் தீப் பிடிப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.  
ஆனால் பெரும்பாலான தீ விபத்துகள் சமூக விரோதிகளால் நிகழ்கின்றன. இது, ஆண்டு தோறும் தொடர்ந்து நடந்து வருகிறது,  இதற்கு தீர்வு காணப்படாமலேயே உள்ளது. 
சில நேரங்களில் மட்டுமே ஒரு சிலரை தீ விபத்து தொடர்பாக வனத் துறையினர் கைது செய்கின்றனர். அபராதம் செலுத்திவிட்டால் அவர்களை விடுவித்துவிடுகின்றனர்.  

"தேவை ஹெலிகாப்டர்களின் உதவி'
வனப்பகுதியில் நடைபெறும் தீ விபத்து தொடர்ந்து பரவாமல் தடுக்க வேண்டுமானால் தீ தடுப்புப் பாதைகள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.  அதாவது வனப்பகுதியில் குறிப்பிட்ட அகலத்தில், சில கி.மீ. தூரம் காய்ந்த முள்புதர்களையும், காய்ந்த சருகுகளையும் அகற்றி மண்ணை கிளறிவிட்டு பாதை போல ஏற்படுத்துவது தான் தீ தடுப்பு பாதையாகும். அப்பகுதியில் தீப் பிடித்தாலும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தீப் பிடித்து எரிந்து அணைந்து விடும். தொடர்ந்து வனப்பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்படும். இப்பாதை அமைக்க ஆண்டு தோறும் அரசு நிதி ஒதுக்குகிறது.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தீ தடுப்புப் பாதைகளை வனத்துறையினர் அமைத்து முடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி வனப்பகுதிகளில் தீப் பிடித்து மரங்கள் எரிந்து சாம்பலாகின்றன. வன விலங்குகள் கூட உயிரிழக்கும் அபாயம் உள்ளது.   வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் ராஜாளி கடற்படை தளம் அமைந்துள்ளது.  மேலும் அரக்கோணத்திலேயே பேரிடர் மீட்புப் படையும் உள்ளது. அதனால் வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் போது ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ தொடர்ந்து பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
எனவே வனத்துறையினர் தீ விபத்தை தடுக்க தீ தடுப்பு பாதைகளை ஏற்படுத்த வேண்டும்.  மேலும் வனத்துறை உயரதிகாரிகள் அரசிடம் கோரிக்கை வைத்து தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வன மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com