தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

கூட்டுறவு சங்கங்களை நிர்வகிப்பதற்கு செயலாட்சியர்கள் விரைவில் நியமனம்?

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள சூழலில், இச்சங்கங்களை நிர்வகிக்க செயலாட்சியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள சூழலில், இச்சங்கங்களை நிர்வகிக்க செயலாட்சியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடைபெற்றன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த ஆண்டு மே 9ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இச்சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். 
அவர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்துவது குறித்து கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. 
கூட்டுறவுத் துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன்வளத் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டு வசதித் துறை, பனை பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத் துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத் துறை, சமூக நலத் துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத் துறை ஆகிய 15 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. 
தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், மாநில சங்கங்கள் என்ற மூன்றடுக்கு முறையில் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதால் அவற்றுக்கான தேர்தல்களை ஐந்து கட்டங்களாக நடத்த கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டு அதற்கான தேதிகளை அறிவித்திருந்தது.
அதன்படி தேர்தல் நடத்த அறிவிப்பு தேர்தல் அலுவலர்களால் வெளியிடப்பட்டு தேர்தல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு எதிராக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏ சக்கரபாணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். "கூட்டுறவு சங்கத் தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடு நடக்கிறது. ஆளுங்கட்சியினர் மீது புகார்கள் கூறப்பட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, நடந்து முடிந்த தேர்தல்களையும் செல்லாது என அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாக, நேர்மையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "கூட்டுறவு சங்கத் தேர்தலில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். வேட்பு மனுக்களை வாங்கவோ, பரிசீலிக்கவோ கூடாது. அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்தவித நடவடிக்கையுயைம் எடுக்கக் கூடாது' என்று உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து அடுத்த உத்தரவு வரும் வரை கூட்டுறவு தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரன் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததோடு, தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டது. எனினும், தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிபதிகள் தடை விதித்தனர். அதைத் தொடர்ந்து மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 7-ம் தேதி கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையே விசாரிக்கும் எனவும், வழக்கை ஜூன் மாதம் இறுதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான தடை தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகளாக பதவி வகித்து வந்த பிரதிநிதிகளின் பதவிக் காலம் மே 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்தச் சங்கங்களை நிர்வகிக்க முன்பு தனி அலுவலர் என்றும் தற்போது செயலாட்சியர் என்றும் அழைக்கப்படும் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை தமிழக அரசு விரைவில் நியமனம் செய்யும் என்று கூட்டுறவு சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.