பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கூட்டுறவு வங்கிக் கிளைக்கு பழனிப்பேட்டையில் சொந்தக் கட்டடம்: அரக்கோணம் நகர மக்களின் கனவு நிறைவேறுமா?

அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் நகர கூட்டுறவு

News image
Updated On :27 நவம்பர் 2018, 1:32 am

எஸ்.சபேஷ்

அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் நகர கூட்டுறவு வங்கியின் பழனிப்பேட்டை கிளைக்கான சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற நகர மக்களின் நீண்டநாள் கனவு இன்னமும் நிறைவேறாமல் உள்ளது.
அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியின் பழனிப்பேட்டை கிளை கடந்த 1992 முதல் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. கடந்த 26 ஆண்டுகளாக செயல்படும் இக்கிளையில் தற்போது ரூ.20 கோடிக்கு மேல் வைப்புத்தொகை உள்ளது. 10 ஆயிரம் பேருக்கு மேல் சேமிப்புக் கணக்குகளை வைத்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் நடப்புக் கணக்குகளை வைத்துள்ளனர்.
ரூ.200 கோடி வரவு-செலவு: ரூ.10 கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ள இக்கிளையில் ரூ.200 கோடி வரை ஆண்டு வரவு-செலவு நடைபெறுகிறது. இக்கிளையில் பாதுகாப்பு பெட்டக வசதி இருப்பதால் அவ்வசதியை 100-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
அரக்கோணம் நகரில் உள்ள 36 வார்டுகளில்,  24-ஆவது வார்டு முதல் 36-ஆவது வார்டு வரையிலான 13 வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வங்கிக் கிளை சேவையைத் தவிர வேறு வங்கிச் சேவை இல்லை. கடந்த 26 ஆண்டுகளில் நகரின் வடக்குப் பகுதியில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நகரின் தெற்குப் பகுதியில் அரசு வங்கிக் கிளை ஒன்று கூட திறக்கப்படவில்லை.
முதல் மாடியில் இயங்குவதால் சிரமம்: தற்போது கூட்டுறவு வங்கிக் கிளை  தனியார் கட்டடத்தின் முதல் மாடியில் செயல்படுகிறது. இக்கிளையின் வாடிக்கையாளர்களில் 60 சதவீதத்தினர் வயது முதிர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த வங்கிச் சேவையை பெற மாடிப் படிகளில் ஏறிச் செல்வதற்கு முதியவர்களும், உடல்நலம் குன்றியவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வங்கிக் கிளைக்கு சொந்தமாக கட்டடம் கட்டப்படுவதோடு, வாகன நிறுத்துமிடங்களும் அமைத்தால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என்பது இப்பகுதியினரின் கருத்து. அத்துடன் இதன் சேவை மேலும் பல மடங்கு விரிவடையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நிதி இருந்தும், இடமில்லை: இது தொடர்பாக நகர கூட்டுறவு வங்கி அலுவலர்களிடம் கேட்டபோது, சொந்தக் கட்டடம் கட்டும் எண்ணம் உள்ளது. இதற்கான நிதியும் உள்ளது. இருப்பினும் சொந்த இடம் இல்லை என்று கூறினர்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
அரக்கோணத்தில் சில இடங்களில் ஏக்கர் கணக்கில் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. ஆனால் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. வேலூர் மாவட்ட நுகர்பொருள் கூட்டுறவு மொத்த பண்டகசாலைக்கு பழனிப்பேட்டையில் ஸ்ரீதேவி திரையரங்கு அருகே 4.5 ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளது. இந்த இடத்துக்கு அருகில் உள்ள கூட்டுறவுத் துறை இடத்தில் பண்டகசாலையும், மண்ணெண்ணெய் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள மீதி இடம் பயன்பாட்டில் இல்லை.
அதேபோல், அரக்கோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கிருபில்ஸ்பேட்டை திரு.வி.க. தெருவில் 3 ஆயிரம் சதுரஅடி நிலம் பயன்பாடின்றி உள்ளது. இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றை வங்கி நிர்வாகம் தேர்வு செய்து அந்த இடத்தை கூட்டுறவுத் துறையிடம் பெற்று பழனிப்பேட்டை வங்கிக் கிளைக்கு சொந்தக் கட்டடம் கட்ட முடியும் என்று தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற இடம்: பழனிப்பேட்டை நுகர்பொருள் கூட்டுறவு மொத்த பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் அமைந்தால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக இருக்கும். அத்துடன் சொந்தக் கட்டடத்தில் வங்கிக் கிளை அமையும் நிலையில் பாதுகாப்பு பெட்டக வசதியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களுக்கும் சேவையை நீட்டிக்க முடியும் என்ற கருத்து வாடிக்கையாளர்களிடையே நிலவுகிறது. இந்த இடத்தை கூட்டுறவுத் துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்க கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாகம் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் வேலூர் மாவட்ட நுகர்பொருள் கூட்டுறவு மொத்த பண்டகசாலை நிர்வாகத்தை அணுகி வங்கிக் கிளைக்கான புதிய கட்டடத்துக்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அரக்கோணம் நகரில் உள்ள 13 வார்டுகளைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிச் சேவையைப் பெரும் பொதுமக்கள், வணிகர்களின்  கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.