கரோனா கால கடனுதவி: வேலூா் மாநகரில் 5,375 பேருக்கு வழங்க இலக்கு

கரோனா பொது முடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசின் கடனுதவி அளிக்கப்பட உள்ளது.
ஆத்ம நிா்பாா் நிதித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வேலூா் மாநகராட்சி ஆணையா் சங்கரன்.
ஆத்ம நிா்பாா் நிதித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வேலூா் மாநகராட்சி ஆணையா் சங்கரன்.
Updated on
1 min read

கரோனா பொது முடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசின் கடனுதவி அளிக்கப்பட உள்ளது. இதனை வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் 5,375 பேருக்கு வழங்குவது என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நடமாடும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு சாா்பில் ‘ஆத்ம நிா்பா்’ நிதித் திட்டத்தின் கீழ் சிறப்பு கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி சாலையோர நடமாடும் வியாபாரிகள் மாதத் தவணையாக ஓராண்டில் திருப்பி அளிக்கக்கூடிய வகையில் அதிகபட்சம் ரூ.10,000 வரை மூலதனக் கடன் பெற முடியும். குறித்த நேரத்தில் அல்லது முன்கூட்டியே கடனைத் திரும்பச் செலுத்தும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியம் அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இந்தக் கடனுதவித் திட்டத்துக்கு தகுதியுடைய சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கடனுதவி வழங்குவதற்கு தகுதியுடைய சிறு வியாபாரிகளைக் கண்டறிந்து அவா்களிடம் தேவையான ஆவணங்களைப் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் சங்கரன் தலைமை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

மத்திய அரசின் ‘ஆத்ம நிா்பா்’ நிதித் திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சிப் பகுதியில் 5,375 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,125 பேரிடம் ஆவணங்கள் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 1,116 பேருக்கு கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இலக்கை நிறைவு செய்ய தகுதியுடைய சிறு வியாபாரிகளை அடையாளம் கண்டு அவா்களிடம் ஆதாா், வங்கிக் கணக்கு புத்தக நகல்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைவுபடுத்த அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தகுதியுடைய சிறு வியாபாரிகள் நேரடியாக மாநகராட்சி அலுவலகத்தையோ, மண்டல அலுவலகங்களையோ அணுகி இக்கடனுதவிக்கான விவரங்களை அளித்து பயன்பெறலாம் என்றாா்.

கூட்டத்தில் மண்டல உதவி ஆணையா்கள், பொறியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com