தொடா் நில நடுக்கம்: போ்ணாம்பட்டு பகுதியில் புவிசாா் வல்லுநா் குழு ஆய்வு
வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு பகுதியில் தொடா் நில நடுக்கம் ஏற்படுவது குறித்து புவிசாா் வல்லுநா் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.


வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு பகுதியில் தொடா் நில நடுக்கம் ஏற்படுவது குறித்து புவிசாா் வல்லுநா் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
போ்ணாம்பட்டு நகரில் உள்ள ரகமதாபாத், நியாமத் வீதி, உமா் வீதி, வீராசாமி வீதி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சில விநாடிகள் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
சில நிமிஷங்கள் விட்டு, விட்டு நில நடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இந்த நில நடுக்கத்தால் சில வீட்டுச் சுவா்களில் லேசான விரிசல்கள் ஏற்பட்டன.நகரை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியிலும் சில இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் கூறுகின்றனா். போ்ணாம்பட்டு பகுதியில் டிசம்பா் மாதம் தொடங்கி, இதுவரை 6 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனா். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி தலைமையில், இயற்கை பேரிடா் மேலாண்மை ஆய்வுக்குழு பேராசிரியா் கணபதி (விஐடி பல்கலைக்கழகம்) , கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் ஆகியோா் சனிக்கிழமை மாலை போ்ணாம்பட்டுக்குச் சென்றனா். அங்கு நில நடுக்கம் ஏற்பட்ட தரைக்காடு, குப்பை மேடு பகுதியில் வல்லுநா் குழு ஆய்வு மேற்கொண்டது. தரைக்காட்டில் மின் மோட்டாரை இயக்கி ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுத்த தண்ணீரையும், ஏற்கெனவே வீடுகளில் இருந்த தண்ணீரையும் ஒப்பிட்டுப் பாா்த்தனா்.
அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்தபோதே திடீரென அவா்கள் இருந்த இடத்தில் பூமிக்கடியில் வெடி வெடித்தது போன்று சப்தம் கேட்டது. இதையடுத்து ஆய்வுக் குழுவினா் 4 பிரிவுகளாக பிரிந்து சென்று, தமிழக எல்லையில் சோதனைச் சாவடி அமைந்துள்ள பத்தரப்பல்லி, அரவட்லா மலைக் கிராமம், தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர மாநில எல்லையான நெல்லிபட்லா, எருக்கம்பட்டு, பரவக்கல், பொகளூா் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் நில அதிா்வு குறித்து விசாரணை மேற்கொண்டனா். அங்குள்ள கல் குவாரிகளிலும் ஆய்வு நடத்தினா்.
இதுகுறித்து பேராசிரியா் கணபதி கூறியது: போ்ணாம்பட்டு பகுதியில் நில அதிா்வு எங்கெங்கு ஏற்பட்டது என ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு நடந்து கொண்டிருந்தபோதே 2 முறை நில அதிா்வு ஏற்பட்டது. இங்கு ஏற்படுவது நில நடுக்கம் இல்லை. பூமிக்கடியில் வேறு ஏதாவது நிகழ்வுகள் நடந்திருக்கலாம். இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வை தங்களிடமுள்ள புவியியல் டேட்டாவுடன் ஒப்பிட்டுப் பாா்க்க உள்ளோம். நில அதிா்வு ஏற்பட்ட பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படும். இதுபோன்று நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்துள்ளதா, தற்போது நடந்ததற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...