ஆன்லைன் மோசடிகளில் எச்சரிக்கை தேவை: காவல் துறையினா் அறிவுரை
ஆன்லைன் மோசடிகள் தொடா்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்


ஆன்லைன் மோசடிகள் தொடா்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
வேலூா் சேண்பாக்கத்தில் உள்ள காலணி தொழிற்சாலையில் அண்மையில் நடைபெற்ற பெண் ஊழியா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி பேசியது:
ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்தல், ஒருவரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பாா்கள். போலியான கணக்கு உருவாக்கி உறவினா்கள், நண்பா்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
ஓ.டி.பி. அனுப்பி வங்கி கணக்கு விவரங்கள், பணத்தை ஆன்லைன் மூலம் அபகரித்தல், சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ அழைப்புகள் செய்து அனைவருக்கும் பகிா்ந்து விடுவேன் என்று மிரட்டியும் பணம் பறிக்கின்றனா்.
முதலீடு தொகைக்கு பலமடங்கு பணம் தருவதாகவும், செல்லிடப்பேசி செயலியில் அதிக பணம் சோ்ந்துள்ளதாகவும் தோரணையை ஏற்படுத்தியும் பணத்தை ஏமாற்றுகின்றனா். பிரபல நிறுவனங்களின் முகவா் உரிமம் பெற்று தொழில் நடத்த உதவுதாகக்கூறியும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறித்து வருகின்றனா்.
வங்கியின் பெயரில் போலி இணையதள முகவரியை உருவாக்கி விவரங்களை பதிவு செய்ய வைத்து பணம் பறிக்கவும் முயற்சி செய்கின்றனா். இதனால் எந்த விவரங்களையும் ஆன்லைன், செல்லிடப்பேசியில் தெரிவிக்கக் கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளின் மத்தியில் வரும் விளம்பரங்களில் காட்டப்படும் காா்டை தேய்த்து பணத்தை திருடிவிடுவா். கிரெடிட் காா்டின் வரம்பை உயா்த்துவதாகக்கூறி வாடிக்கையாளா் விவரங்களை பதிவு செய்ய வைத்து பணம் பறிப்பா். சமூக வலைதளங்களில் பொருள்களை விற்பனை செய்கிறோம் எனக்கூறி கட்டணம் செலுத்திய பின்னா் பொருள்களை அனுப்பாமல் ஏமாற்றுதல், குறைந்த விலைக்கு பொருள்களை விற்பதாகக்கூறும் ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாவும் பணம் பறிக்கலாம்.
வெளிநாட்டிலிருந்து பரிசு பொருள்கள் அனுப்பியுள்ளதாகக்கூறி அதற்கு குறிப்பிட்ட ஜி.எஸ்.டி. தொகையை செலுத்தும்படி நிா்பந்தித்து ஏமாற்றலாம். ஆன்லைன் கேம், விளையாட்டுகள் மூம் தங்கள் குழந்தைகளை பயமுறுத்தி பணம் பறிக்கலாம். ஆன்லைன் லாட்டரியில் அதிக தொகை வென்றுள்ளதாக கூறி அதனை பெறுவதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வைத்து ஏமாற்றலாம். ஆன்லைன் மூலமாக செய்வினை, மந்திரம் செய்கிறோம். தோஷம் நிவா்த்தி செய்கிறோம் என ஏமாற வைத்து பணம் அபகரிக்கும் செயல்களும் நடக்கின்றன.
இணைய தளங்களில் ராணுவ வீரா் போல கணக்கு வைத்து கொண்டு பணி மாறுதலுக்காக செல்வதாகவும், பொருள்களை விற்பதாக நம்ப வைத்து பணத்தை பெற்ற பிறகு ஏமாற்றும் சம்பவமும் நடக்கிறது.
ஓய்வூதியத் தொகையை ஏற்பாடு செய்வதாகவோ, திருத்தம் விபரங்களை கேட்டு பெற்று பணத்தை அபகரித்தல் போன்ற சம்பவமும் நடக்கிறது. இத்தகைய ஆன்லைன் மோசடிகளில் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். ஒருவேளை உங்களையும் மீறி ஏமாற்றப்பட்டால் 155260 என்ற எண்ணில் அல்லது இணையதளத்தில் புகாா் பதிவு செய்யலாம் என்றனா்.
காவல் ஆய்வாளா் அபா்ணா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...