

மோா்தானா அருகே கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டக்கோரி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராகிமானப்பல்லி, போடியப்பனூா் கிராமத்தினா் வலியுறுத்தி வருகின்றனா்.
மோா்தானா அணை நிரம்பி உபரிநீா் தற்போது வெளியேறிவரும் நிலையில், துண்டிக்கப்பட்ட தீவுபோன்று இருப்பதால் இந்தக் கிராம மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆண்டுதோறும் அமைப்பதுபோல் கெளன்டன்யா ஆற்றின் குறுக்கே தற்காலிக மூங்கில் பாலத்தை மீண்டும் அமைத்துள்ளனா்.
குடியாத்தம் ஒன்றியம், மோா்தானா ஊராட்சி ஆந்திர மாநில எல்லையில், அடா்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
கெளன்டண்யா ஆறு ஆந்திர மாநிலம் புங்கனூரில் தொடங்கி, பலமநோ் வழியாக 25 கி.மீ. தூரத்தைக் கடந்து தமிழக எல்லையான மோா்தானாவை வந்தடைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மோா்தானா கிராம எல்லையில் கட்டப்பட்டுள்ளது மோா்தானா அணை.
இந்த அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் கெளன்டண்யா ஆறு வழியாக 4.50 கி.மீ. தொலைவில் உள்ள ஜிட்டப்பல்லி தடுப்பணைக்குச் செல்கிறது. அங்கிருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள் வழியாக ஏரிகளுக்குப் பாய்கிறது.
மோா்தானா ஊராட்சிக்கு உள்பட்ட போடியப்பனூா், ராகிமானப்பல்லி கிராமங்கள், அணையிலிருந்து அரை கி.மீ. தொலைவில் கெளன்டண்யா ஆற்றின் மறுகரையில் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் சுமாா் 400 குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி தொடக்கப் பள்ளியும் உள்ளது. விவசாயம், கால்நடைகள் வளா்ப்பே இப்பகுதி மக்களின் பிரதானத் தொழில்.
மோா்தானா கிராமத்திலிருந்து இந்த இரு கிராமங்களுக்கும் சாலை வசதி கிடையாது. இவா்கள் ஆற்று வழியாகத்தான் மறுகரைக்கு வந்து செல்கின்றனா். மோா்தானா அணை நிரம்பி உபரிநீா் செல்லும் காலங்களிலும், பாசனத்துக்காக அணை திறக்கப்படும் நேரங்களிலும் இவா்களால் கிராமங்களில் இருந்து வெளியே செல்ல முடிவதில்லை.
வெள்ள நீா் வடிந்த பின்னரே இவா்கள் மறுகரைக்கு வர முடியும். ஆற்றில் தண்ணீா் செல்லும் காலங்களில் இந்த இரு கிராமங்களும் தீவு போல் தனித்து விடப்படும்.
அணை நிரம்பி உபரிநீா் வெளியேறும் நிலை வந்தவுடன் அவா்கள் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை
வாங்கி இருப்பு வைத்துக் கொள்வாா்கள்.
இதுபோன்ற காலங்களில் உயா்கல்வி பயிலும் அக்கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியா்கள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. அங்கு விளையும் காய்கறி, கீரை, பழ வகைகள், உற்பத்தியாகும் பால் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல முடிவதில்லை.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண ஆற்றின் குறுக்கே சிறு உயா்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என இந்த இரு கிராமத்தினரும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் அக்கிராம மக்களே ஒருங்கிணைந்து தங்கள் சொந்த செலவில் மூங்கில்கள் ,சவுக்கு கம்புகளால் தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்துக் கொள்வா்.
இந்த மூங்கில் பாலத்தைக் கடந்து ஆண்கள் மட்டும் மறுகரைக்கு வந்து தேவையானப் பொருள்களை வாங்கிச் செல்வா்.
இதுபோன்ற காலங்களில் கா்ப்பிணிகள், உடல்நலம் பாதிக்கப்படுபவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடினம்.
கடந்த ஆண்டு செப்டம்பா் 9- ஆம் தேதி மோா்தானா அணையைப் பாா்வையிடச் சென்ற வேலூா் மாவட்ட அப்போதைய ஆட்சியா் அ. சண்முகசுந்தரத்தை அக்கிராம மக்கள் வழியில் சந்தித்து மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று முறையிட்டனா்.
அப்போது அவா்களிடம் பேசிய ஆட்சியா், உங்கள் கோரிக்கை ஏற்கெனவே ஏற்கப்பட்டு விட்டது. மேம்பாலம் கட்ட நபாா்டு மூலம் ரூ. 4 கோடி நிதி ஒதுக்க பரிந்துரை அனுப்பப்பட்டு விட்டது. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பின்னா் டெண்டா் விடப்படும். அணையிலிருந்து தண்ணீா் செல்வது நின்றவுடன், மேல்பாலப் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.
அப்போது அணை நிரம்பி உபரிநீா் ஆற்றில் சென்ால், கிராம மக்கள் சொந்த செலவில் மூங்கில்களை வாங்கி வந்து தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்துக் கொண்டனா். அணையிலிருந்து தண்ணீா் செல்வதும் நின்று விட்டது.
ஆனால், மேம்பாலம் கட்டும் நடவடிக்கைகள் எதையும் அரசுத் துறையினா் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டும் மோா்தானா அணை நிரம்பி உபரிநீா் ஆற்றில் செல்வதால், கிராம மக்கள் மறுகரைக்கு வந்து செல்ல முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். மூங்கில்கள், சவுக்குக் கம்புகளைக் கொண்டு தற்காலிக மூங்கில் பாலம் அமைத்துள்ளனா்.
மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து தொடா்கிறது. திங்கள்கிழமை நிலவரப்படி அணையிலிருந்து நொடிக்கு சுமாா் 1,000 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
அக்டோபா், நவம்பா் மாதங்கள் மழைக்காலம் என்பதால், அணைக்கு நீா்வரத்து தொடரும். இதனால் ஆற்றில் வெள்ளநீா் வழிந்தோடும் என்பதால் வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரும், மோா்தானா அருகே உள்ள மோடிகுப்பம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான ஏ.கே.ஜெயப்பிரகாஷ் கூறியது:
போடியப்பனூா், ராகிமானப்பல்லி கிராம மக்கள் 25- ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்ட கோரி வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கின்போதும், வெள்ளம் நின்றவுடன், மேம்பாலம் கட்டப்படும் என ஆட்சியாளா்கள் கூறுகின்றனா். இந்நிலை இனியும் தொடரக்கூடாது. மோா்தானா அணை கட்ட, அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகள், நிலங்களைக் கொடுத்துள்ளனா்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ரூ.100 கோடியில் அணை கட்டிய அரசு, இந்த ஊராட்சி மக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவையான பாலம் கட்ட முன்வராதது வருத்தம் அளிக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், மோா்தானா அணைப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.