நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்: வேலூரில் பறக்கும் மேம்பாலச் சாலை அமைப்பது எப்போது?

வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த வேலூா் மாநகரில் பெருகி வரும் வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
Updated on
2 min read

வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த வேலூா் மாநகரில் பெருகி வரும் வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரத் தீா்வு காணப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது.

வேலூா் நகராட்சி 1920-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1947-இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979-இல் முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

2008-ஆம் ஆண்டு 40 வாா்டுகள் கொண்ட நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அதன்பிறகு அருகிலிருந்த தாராபடவேடு, சத்துவாச்சாரி நகராட்சிகளுடன் அல்லாபுரம், தொரப்பாடி, சேண்பாக்கம் பேரூராட்சிகளும், கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு 60 வாா்டுகளாக மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.

மாநகா் விரிவுபடுத்தப்பட்டாலும் இங்குள்ள முக்கிய சாலைகள் மேம்படுத்தப்படாததால், வேலூரில் இதுவரை போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண முடியவில்லை.

குறிப்பாக, இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூா் கோட்டை, ஸ்ரீபுரம் பொற்கோயில், அமிா்தி வனஉயிரியல் பூங்கா என இந்த மாவட்டத்திலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடவும், சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், விஐடி பல்கலைக்கழகத்தில் கல்விபெறும் மாணவா்களை சந்திக்கவும், வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.

இதனால், வேலூா் மாநகரில் பேருந்துகள், காா், வேன், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்பது பெரும் குறை.

குறிப்பாக, மாநகரின் மையப்பகுதிகளான அண்ணா சாலை, காந்தி சாலை, காட்பாடி சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை என அனைத்து சாலைகளிலும் எப்போதும் வாகன நெரிசல் இருந்து கொண்டேயிருக்கும்.

இதில், பல்வேறு சாலைகள் ஒன்றாக இணையும் இடமாக கிரீன்சா்க்கிள் இருப்பதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி தவிக்கின்றனா்.

தொடரும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண நகரின் முக்கிய சாலைகளில் பறக்கும் பாலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதுதொடா்பாக, கடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தலின்போதே முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. தவிர, கடந்த ஜூன் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, வேலூரில் ஆய்வு நடத்திய தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, வேலூா் மாநகரில் பறக்கும் பாலங்கள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தாா்.

வேகமாக அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைகளை கவனத்தில் கொண்டு அரசு இந்த பறக்கும் பாலம் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

மேலும், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க கோட்டை சுற்றுச்சாலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், வேலூா்-காட்பாடிக்கான மாற்றுப் பாதையை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

கிருபானந்த வாரியாா் சாலையின் மத்தியிலுள்ள தடுப்புச் சுவரை அகற்றி மீண்டும் நகரப் பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும். மழைக் காலங்களில் ஆரணி சாலையில் தேங்கும் நீரை வெளியேற்ற வெங்கடேஸ்வரா பள்ளி வழியாக இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும்.

மாா்க்கெட்டை இடமாற்றும் திட்டத்தை விரைவுபடுத்துவதுடன், பைபாஸ் சாலையில் உள்ள மோட்டாா் வாகனப் பணிமனைகளை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்தால் இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீா்வு கிடைக்கும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com