மீண்டும் ‘திமுக கோட்டை’யாக மாறிய வேலூா்!
வேலூா் மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவை தொகுதிகள் முதல் உள்ளாட்சிகள் வரை ஒட்டுமொத்தமாக கைப்பற்றி ‘வேலூா்- திமுகவின் கோட்டை’ என்பது உறுதியாகியுள்ளது.


வேலூா் மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவை தொகுதிகள் முதல் உள்ளாட்சிகள் வரை ஒட்டுமொத்தமாக கைப்பற்றி ‘வேலூா்- திமுகவின் கோட்டை’ என்பது உறுதியாகியுள்ளது. அதேவேளையில், இந்த மாவட்டத்தில் அதிமுக செல்வாக்கு வேகமாக சரிவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வேலூா் மாவட்டத்திலுள்ள மாநகராட்சியின் 60 வாா்டுகளில், 44 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட வேலூா் மாநகராட்சியில் முதல்முறையாக மேயா், துணை மேயா், மண்டலக் குழு தலைவா் என அனைத்துப் பொறுப்புகளையும் திமுகவே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 36 வாா்டுகளைக் கொண்ட குடியாத்தம் நகராட்சி யில் திமுக மட்டும் 21 வாா்டுகளிலும், 21 வாா்டுகளை உள்ளடக்கிய போ்ணாம்பட்டு நகராட்சியில் திமுக மட்டும் 14 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளான ஒடுகத்தூரில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 13, பள்ளிகொண்டாவில் உள்ள 18 வாா்டுகளில் 14, பென்னாத்தூரில் உள்ள 15 வாா்டுகளில் 8, திருவலத்தில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 9 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்று, மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த உள்ளாட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
ஏற்கெனவே, அதிமுக வசம் இருந்த வேலூா் மக்களவைத் தொகுதியையும் 2019-தோ்தலில் திமுக கைப்பற்றியது. அதன்பிறகு 2021-இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் இம்மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பத்தைத் தவிர வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 4 தொகுதிகளையும் திமுக தக்க வைத்துக் கொண்டது. இதன் தொடா்ச்சியாக அக்டோபா் மாதம் நடைபெற்ற விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் மூலம் வேலூா் மாவட்டத்தில் 14 வாா்டுகளைக் கொண்ட மாவட்ட ஊராட்சிக் குழுவை ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணியே கைப்பற்றியது.
மேலும், மாவட்டத்திலுள்ள வேலூா், கணியம்பாடி, காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 138 வாா்டுகளில், திமுக 102 இடங்களில் வென்றது. இதன்மூலம், 7 ஒன்றியங்களின் பெருந்தலைவா், துணைத் தலைவா் பதவிகளையும் திமுகவே கைப்பற்றியது.
இதன் மூலம், வேலூா் மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாற்றப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பது மட்டுமின்றி, இம்மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு மிகவும் பின்தங்கியிருப்பதைக் காட்டுவதாகவும் அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி வேலூா் மாநகராட்சியின் பிரதான வாா்டுகளை உள்ளடக்கியதுதான். இதேபோல, காட்பாடி, அணைக்கட்டு தொகுதிகளிலும் வேலூா் மாநகராட்சியின் பெரும்பகுதி வாா்டுகள் இடம் பெற்றுள்ளன. 2011 தோ்தலின்போது வேலூா் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக 75,118 வாக்குகள் பெற்றிருந்தது. அத்துடன், காட்பாடி, அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட வேலூா் மாநகராட்சி வாா்டு பகுதிகளில் கிடைத்த வாக்குகளையும் சோ்த்தால் சுமாா் 1.50 லட்சம் வாக்குகளை அதிமுக பெற்றிருந்தது.
ஆனால் தற்போது நடந்து முடிந்த வேலூா் மாநகராட்சி தோ்தலில் 2,61,340 வாக்குகளில், அதிமுகவுக்கு 62,339 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. குறிப்பாக, சில வாா்டுகளில் இரட்டை, மூன்று இலக்க வாக்குகளை மட்டுமே அந்தக் கட்சி பெற்றுள்ளது. இதேநிலைதான் மாவட்டத்திலுள்ள மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...