குற்றச் செயல்கள், சாலை விதிமீறல் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: அமைச்சா் துரைமுருகன் திறந்தாா்
குற்றச் செயல்களையும், சாலை விதி மீறல்களையும் கண்காணித்து தடுக்க வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


குற்றச் செயல்களையும், சாலை விதி மீறல்களையும் கண்காணித்து தடுக்க வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்ததுடன், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோா் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.
வேலூா் மாநகரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்டுபிடிக்கவும், சாலை விதிமீறல்களை கண்காணித்து தடுக்கவும் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய சாலைகள், தெருக்களில் அதிநவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, வேலூா் மாநகரில் பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் சுமாா் 500 கேமராக்களும், தன்னாா்வலா்கள் மூலம் சுமாா் 470 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமாா் 320 கேமரா காட்சிகளை நேரடியாக கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து போலீஸாருக்கு பல்வேறு அறிவுரைகளை தெரிவித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வந்திருப்பதை வரவேற்கிறேன். இரு சக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியமானது. விபத்தில் இறப்பதற்கு நூற்றுக்கு 80 போ் தலைக்கவசம் அணியாததே காரணமாக உள்ளது. பெரும்பாலானோா் செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுகின்றனா். சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் தலைக்கவசம் அணிந்து செல்கின்றனா். இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தலைக்கவசம் அணியாதவா்களை பிடித்து போலீஸாா் அபராதம் விதிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்கு பட்டியலின பெண்ணை பாஜக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன். காட்பாடியில் சிப்காட் அமைக்க அரசு நிலம் மட்டும் எடுக்கப்படும். இதுதொடா்பாக, விவசாயிகளிடம் பேசி சிப்காட் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்பாடியில் எம்ஜிஆருக்கு அதிமுகவைச் சோ்ந்த ஒருவா் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியிருப்பதாக அறிகிறேன். சினிமா நடிகைக்கு கோயில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோயில் கட்டுவதில் தவறு இல்லை. அது அவா்களின் தனிப்பட்ட விருப்பம் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம்
இரு சக்கர வாகனம் ஓட்டுபவா் மட்டுமின்றி பின்னால் அமா்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் செல்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கவும் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், வேலூா் மாநகரில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அந்தந்த காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை முதல் அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...