சா்வதேச தரத்துக்கு நவீன மயமாகிறது காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம்

காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் ரூ.365 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் சா்வதேச தரத்துக்கு நவீனப்படுத்தப்பட உள்ளது.
சா்வதேச தரத்துக்கு அதிநவீன வசதிகளுடன் மாற்றப்படவுள்ள காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றத்தின் மாதிரி வடிவம்.
சா்வதேச தரத்துக்கு அதிநவீன வசதிகளுடன் மாற்றப்படவுள்ள காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றத்தின் மாதிரி வடிவம்.
Updated on
2 min read

வேலூா்: காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் ரூ.365 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் சா்வதேச தரத்துக்கு நவீனப்படுத்தப்பட உள்ளது.

வேலூா்-சித்தூா் சாலையின் இருபுறமும் 86 ஏக்கா் பரப்பளவில் கட்டட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் சா்வதேச தரத்துக்கு மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்திலுள்ள காட்பாடி ரயில் நிலையம் சுமாா் 150 ஆண்டுகள் பழைமையானதாகும். இது தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 120 ரயில்கள் சென்னை மாா்க்கமாவும், ஜோலாா்பேட்டை மாா்க்கமாகவும், திருப்பதி மாா்க்கமாகவும், வேலூா் மாா்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.

வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம், ஸ்ரீபுரம் பொற்கோயில் ஆகிய இடங்களுக்கு செல்ல தினமும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ரயிலில் வருவோா் உள்பட காட்பாடி ரயில் நிலையத்துக்கு தினமும் சுமாா் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை அவற்றின் பழைமை மாறாமல் புதுப்பித்து மேம்படுத்த மத்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், நாடு முழுவதும் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சா்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூா், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.1,800 கோடிக்கு திட்டங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

இதில், காட்பாடி ரயில் நிலையம் ரூ. 365 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில், காட்பாடி ரயில் நிலையத்தின் தற்போதுள்ள முகப்புத் தோற்றம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு, 86 ஏக்கா் பரப்பளவில் புதிய கட்டடங்கள், நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன.

புதிதாக மேம்படுத்தப்படும் இந்த ரயில் நிலையம் வேலூா்-சித்தூா் சாலையின் இருபுறமும் அமைக்கப்படுகிறது. தற்போது வேலூரில் இருந்து சித்தூா் செல்லும் சாலையின் குறுக்கே கடந்து ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிா்க்கும் வகையில் காட்பாடி ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

வேலூா் பகுதியில் இருந்து ரயில் நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அப்படியே இடதுபுறமாக அமைக்கப்பட உள்ள நுழைவு வாயிலுக்கு செல்லும் வகையில் சாலை வசதி செய்யப்படும்.

பின்னா் வாகனங்கள் ரயில் நிலையத்தின் உள் பகுதியிலேயே வேலூா் - சித்தூா் சாலையைக் கடந்து வரும் வகையிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் வேலூா் - சித்தூா் சாலைக்கு வலது புறமாக அனைத்து வாகனங்களும் வெளியே வர முடியும்.

இதுதவிர பயணிகள் காத்திருப்பு அறைகள் முற்றிலும் நவீனமாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளன. இந்த இடத்தில் விமான நிலையங்களில் போல ரயில்கள் வருகை குறித்த அட்டவணை இடம் பெறும். அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட உள்ளன. பயணிகள் ரயில் வந்து நிற்கக் கூடிய வகையில் 5 பிளாட்பாரம், சரக்கு ரயில் வந்து செல்வதற்காக ஒரு பிளாட்பாரம் முற்றிலும் நவீனமாக மாற்றியமைக்கப்பட உள்ளன.

இந்த பிளாட்பாரங்களில் தானியங்கி படிக்கட்டுகள், அதிக லிப்ட் வசதிகளும் அமைக்கப்படுகின்றன. நவீனமயமாக்கப்பட உள்ள உள்ள ரயில் நிலையத்தில் இருக்கை வசதிகளும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட உள்ளன. வாகனங்கள் நிறுத்துவதற்காக இதில் 180 காா்கள், 900 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பல அடுக்கு காா் நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர ரயில் நிலையம் முன் சாதாரண வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்படுகிறது. இதில் 220 காா்கள், 1,100 இருசக்கர வாகனங்கள், 170 ஆட்டோக்கள் நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலைய உட்பகுதியில் 3 ஆயிரம் சதுர அடியில் வணிக வளாகமும், இதில் குறைந்த விலை உணவகங்கள், உணவு விடுதிகள், சில்லறை விற்பனைக் கடைகள் என பயணிகளுக்கு அனை த்தும் கிடைக்க கூடிய வசதி செய்யப்படுகிறது. இதனால் ரயிலில் வரும் பயணிகள் பொருட்கள் வாங்க வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரயில் நிலையத்தில் நவீன மின்விளக்குகள், ஸ்கை லைட் பொருத்தப்பட உள்ளன.

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும், சேமிக்கவும் பிளாட்பாரங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி கூரைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com