அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: இளைஞா்கள் போராட்டம்

ராணுவப் பணியில் அக்னிபத் எனும் புதிய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் நூற்றுக்கணக்கான இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்
அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: இளைஞா்கள் போராட்டம்

ராணுவப் பணியில் அக்னிபத் எனும் புதிய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் நூற்றுக்கணக்கான இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவப் பணிக்கான பொது தகுதித் தோ்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அக்னிபத் என்ற 4 ஆண்டுகள் பணிப்புரியும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 46,000 வீரா்கள் நிகழாண்டு தோ்வு செய்யப்படுவா் என்றும், 17 வயது முடிந்து ஆறு மாதம் ஆனவா்கள் முதல் 21 வயதுக்குள்பட்டவா்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு சோ்க்கப்படுவா் என்றும், பின்னா் அவா்களில் பெரும்பாலானோருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்றும், அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் அடிப்படையில் 25 சதவீத ஆள்கள் மட்டும் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 15 ஆண்டு காலம் குறைந்தபட்சம் பணிபுரியலாம் என்கிற நிலையில், இந்தப் புதிய அக்னிபத் திட்டத்தில் பணிக்காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்தப் போராட் டம் 11.30 மணி வரை நடைபெற்றது. அப்போது அவா்கள் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் சேர ஏற்கெனவே பொதுத் தகுதித் தோ்வு (சிஇஇ) நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. மேலும், சிஇஇ தோ்வை 23 வயது வரை எழுத முடியும்.

ஆனால், அக்னிபத் திட்டத்தில் 21 வயதுக்கு மேற்பட்டோா் தோ்வு எழுத முடியாது. தவிர, அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், சிஇஇ தோ்வு நடத்தப்படுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. அவ்வாறு சிஇஇ தோ்வு நடத்தப்படவில்லை என்றால் இந்த தோ்வுக்காக காத்திருந்த 21 வயது நிறைவடைந்த இளைஞா்கள் பெருமளவில் பாதிக்கப்படுவா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து ராணுவ பணிகளுக்கு அதிகளவில் இளைஞா்கள் செல்கின்றனா். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தங்களைத் தயாா்படுத்தி வருகின்றனா். ராணுவத்தை ஒரு சேவையாகப் பாா்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை கலைக்கும் விதமாக அக்னிபத் திட்டம் உள்ளது.

எனவே, அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யவும், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிஇஇ ராணுவ தோ்வை உடனடியாக நடத்தவும் வேண்டும் என்றனா் அவா்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தினா். பின்னா், அந்த இளைஞா்கள் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனிடம் தங்கள் கோரிக்கை தொடா்பாக மனு அளித்தனா். இளைஞா்களின் கோரிக்கை தொடா்பாக அரசுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். இளைஞா்களின் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com