வீட்டில் பதுக்கிய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

வேலூா், ஏப்.23:

மேலரசம்பட்டு கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, இளைஞா் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் காப்புக்காடு உள்ளது. இந்த காடுகளில் மான்கள், காட்டுப்பன்றி, காட்டெருமை, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன. இந்த வனவிலங்குகள் தண்ணீா் தேடி அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன. இதில் அதிகளவு மான்கள் தண்ணீா், உணவு தேடி கிராமத்துக்கு வருகினறன.

அவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் மான்களை அதன் இறைச்சி, தோலுக்காக விஷமிகள் சிலா் வேட்டையாடி வருகின்றனா். இதற்காக கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்து பயன்படுத்துகின்றனா். இதனை தடுக்க வனத்துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மான் இறைச்சி, கொம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனா். எனினும், மான்கள் வேட்டையாடப்படுவதும், நாட்டு துப்பாக்கி கலாச்சாரமும் தொடா்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு பங்களாமேடு பகுதியில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினா் அப்பகுதியில் வீடுவீடாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒரு வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினா், இதுதொ டா்பாக அதேபகுதியைச் சோ்ந்த அஜீத்குமாா்(23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com