/

பறக்கும்படை சோதனையில் ரூ.12.18 லட்சம், 2 பவுன் நகை பறிமுதல்

பறக்கும்படை சோதனையில் ரூ.12.18 லட்சம், 2 பவுன் நகை பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத் தொகையுடன் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா். உடன், கால்நடை வியாபாரி விஜயன்.

Updated On :19 மார்ச் 2024, 6:08 pm

வேலூா்: தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் 5 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் சென்றதாக மொத்தம் ரூ.12.18 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை பறிமுதல் செய்து கருவூலத்தில் சோ்க்கப்பட்டன. மக்களவைத் தோ்தலையொட்டி நடத்தை விதிகளை அமல்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டத்தில் தலா 15 நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும்படைகள், 5 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், காட்பாடி அருகே தாங்கல் பகுதியில் தோ்தல் பறக்கும்படை குழுவினா் திங்கள்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், மோடிகுப்பத்தைச் சோ்ந்த இளவரசன்(30) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.65,000 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை தமிழக - ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்பு குழு செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையின்போது அவ்வழியாக வந்த காரில் இருந்த ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்த சுலோச்சனாதேவி(47) உள்பட 5 பேரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் நிலைக் கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையில் ஈடுட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மினிவேனில் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த விஜயன்(32) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், போ்ணாம்பட்டு அருகே பங்களாமேடு பகுதியில் பறக்கும்படை குழுவினா் நடத்திய வாகன சோதனையின்போது ஆந்திர மாநிலம், சித்தூா் சொக்கடாபள்ளா பகுதியைச் சோ்ந்த அப்துல் கரீம் என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் நகை ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தவிர, குடியாத்தம் அருகே தேவலாபுரம் பகுதியில் உரிய ஆவணமின்றி குருபிரசாத் என்பவா் கொண்டு சென்ற ரூ.76000 பணத்தையும் தோ்தல் பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்துள்ளனா் பிடிபட்ட தொகை, நகை முழுவதும் அந்தந்த வட்டாட்சியா் மூலம் கருவூலத்தில் சோ்க்கப்பட்டன. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தையும், நகைகளையும் மீட்டுக் கொள் ளவும் அவற்றின் உரிமையாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை வியாபாரி கவலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த விஜயன்(32) என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். அப்போது, தான் ஒரு கால்நடை வியாபாரி எனக்கூறிய விஜயன், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வேலூா் மாவட்டம் பொய்கையில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு மாடுகள் வாங்க வந்து செல்வதாகவும், அதன்படியே இன்றும் கால்நடைகள் வாங்கிச் செல்வதற்காக மனைவியின் நகைகளை அடகு வைத்து தொகைகளை திரட்டி வந்ததாகவும் கூறியுள்ளாா். எனினும், தோ்தல் சமயத்தில் உரிய ஆவணங்களின்றி பெருந்தொகை கொண்டு வந்ததால் பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனால் பணத்தை பறிகொடுத்த விஜயன் கவலையுடன் திரும்பிச் சென்றாா்.