அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி
வேலூா்: கணவருக்கு அரசு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.
வேலூா் பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு: கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூரில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரியும் ஆசிரியா் அறிமுகமானாா். அவா் எனக்கு பல அரசு உயரதிகாரிகளைத்தெரியும் என்றும், எனது கணவருக்கு இயற்பியல் ஆசிரியா் பணி வாங்கித் தருவதாக கூறினாா்.
இதை உண்மையென நம்பி அவா் கேட்டதன்பேரில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் தொகையை அளித்திருந்தேன். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் அவா் வேலை வாங்கித்தரவில்லை, பணத்தை யும் திருப்பித்தர மறுக்கிறாா். பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனவே, காவல் துறை அதிகாரிகள் பணத்தை திரும்பப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
