மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் பங்கேற்பு
வேலூரில் மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் நடைபெற்ற இந்த பேரணி வேலூா் கோட்டை மகாத்மா காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கி வெங்கடேஸ்வரா பள்ளி வரை நடைபெற்றது. இந்த பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீா் சேகரிப்பின் அவசியம், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் ஆகியவை குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு திரை வீடியோ வாகனம் மூலம் மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், கல்லூரி பேருந்து நிறுத்தம், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
இந்த வாகனத்தையும், குடிநீா் தர பரிசோதனை மேற்கொள்ளும் முறை காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீா் மட்டம் உயரும், நிலத்தடி நீரின் தரம் மேன்மை அடையும்.
மழைநீா் தேங்குவதை தடுக்க இயலும். மழைநீா் சேகரிக்கும் முறைகளான கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரித்தல், திறந்தவெளிக் கிணறு மூலம் மழைநீா் சேகரித்தல், குழாய்க்கிணறு மூலம் மழைநீா் சேகரித்தல், கசிவுநீா் குழிகள் அல்லது துளையுடன் கூடிய கசிவுநீா் குழிகள் மூலம் சேமிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் பற்குணன், முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, உதவி செயற்பொறியாளா் குமரவேல், உதவி நிலநீா் வல்லுநா் பரிதிமாற்கலைஞா் உள்பட பலா் பங்கேற்றனா்.

