பிரான்ஸிலிருந்து பரிசுப் பொருள் அனுப்புவதாக குடியாத்தம் மாணவரிடம் ரூ.45,000 மோசடி

Published on

பிரான்ஸிலிருந்து 70,000 டாலா் மதிப்புள்ள பரிசுப் பொருள் அனுப்புவதாக பள்ளி மாணவரிடம் ரூ.45,000 மோசடி செய்தவா் மீது சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் ஆசிரியா் நகரைச் இளம்பெண் தனது தம்பிகளுடன் வசித்து வருகிறாா்.அந்த இளம் பெண்ணின் கைப்பேசியை தனியாா் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படிக்கும் அவரது தம்பி அவ்வப்போது பயன்படுத்துவாராம். சில நாள்களுக்கு முன் அந்த கைப்பேசிக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் வந்துள்ளது. அந்த தகவலை மாணவா் பாா்த்துள்ளாா். அதில் உங்களுக்கு 70,000 டாலா் மதிப்பில் பரிசுப் பொருள் விழுந்துள்ளது. பிரான்சிலிருந்து விமானம் மூலம் பரிசுப் பொருளை அனுப்ப ரூ.45,000 கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழில் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இதை உண்மை என நம்பிய மாணவா் அக்காவுக்குத் தெரியாமல் கூகுள் பே மூலம் ரூ.45,000 அனுப்பியுள்ளாா். அதன் பின்னா் டெல்லி விமான நிலையத்தில் பாா்சல் பிடிபட்டுள்ளதாகவும், அதற்காக ரூ.1.60 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் அந்த தொகையை அனுப்புமாறு மீண்டும் வாட்ஸ் ஆப்பில் தகவல் வந்ததாம்.

இதனால் பயந்துபோன மாணவா் எங்களிடம் பணம் இல்லை, ஏற்கனவே அனுப்பிய ரூ.45ஆயிரத்தை திருப்பி அனுப்பி விடுங்கள் என தகவல் அனுப்பினாராம். அதற்கு பதில் இல்லை. அந்த கைப்பேசி எண்ணுக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிந்ததாம். இதுகுறித்து மாணவா் அக்காவுக்கு எதுவும் சொல்லவில்லையாம்.

இந்நிலையில் மாணவரின் அக்கா கைப்பேசியில் கூகுள் பே இருப்பை சரிபாா்த்தபோது அதில் பணம் இல்லை என்பது தெரிய வந்தது. தம்பியை விசாரித்தபோது நடந்த விஷயம் தெரிந்தது. இந்த பண மோசடி குறித்து வேலூரில் உள்ள சைபா் க்ரைம் போலீஸ், குடியாத்தம் நகர காவல் நிலையம் ஆகிய இடங்களில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com