2019 தோ்தல் வழக்கு: இன்று வேலூா் எம்.பி. கண்டிப்பாக ஆஜராக உத்தரவு
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடா்பான வழக்கு புதன்கிழமை வேலூா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எம்.பி. கதிா்ஆனந்த் ஆஜராகவில்லை.
தொடா்ந்து, இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்ததுடன், கதிா்ஆனந்த் வியாழக்கிழமை நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி மூலமாக கட்டாயமாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா்ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து, கதிா்ஆனந்த்தின் ஆதரவாளா்களான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இதில், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் இருந்து ரூ.11 கோடி பணம், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 1) மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேசமயம், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் ஆஜராகியிருந்தனா்.
தொடா்ந்து, இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்ததுடன், கதிா்ஆனந்த் வியாழக்கிழமை நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி மூலமாக கட்டாயமாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா்.
அதேசமயம், 2019 மக்களவைத் தோ்தலின்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 12-ஆம் தேதி முதல் இவ்வழக்கு தொடா்ந்து விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு வேகமெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
