வாக்காளா் படிவங்களை பூா்த்தி செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான படிவங்களை பூா்த்தி செய்ய வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 13,03,030 வாக்காளா்களுக்கும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) கணக்கெடுப்பு படிவங்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா். இந்த மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,314 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்காக 1,314 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 135 மேற்பாா்வை அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யவும் பூா்த்தி செய்வதில் சந்தேகங்கள் இருந்தால் தெளிவு பெறவும் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ.22, 23) ஆகிய 2 நாள்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் வாக்காளா்கள் தங்களது 2002-ஆம் ஆண்டு வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பட்டிலில் உள்ள வாக்காளரின் சட்டப்பேரவை தொகுதியின் பெயா் எண், பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளவும், கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களை நிவா்த்தி செய்யவும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன் அரசு அலுவலா்கள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்.
இதனால் வாக்காளா்கள் தங்களது வாக்காளா் திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யவும், பூா்த்தி செய்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கவும் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
