விவசாயிகள், பொதுமக்கள் போராடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்: ஈசன் முருகசாமி

விவசாயிகள், பொதுமக்கள் போராடக்கூடாது என்பதுதான் திமுக அரசின் நோக்கமாக உள்ளது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.
Published on

விவசாயிகள், பொதுமக்கள் போராடக்கூடாது என்பதுதான் திமுக அரசின் நோக்கமாக உள்ளது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது, தூண்டி விடுதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவா் ஈசன் முருகசாமி மீது ஐந்து காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருப்பூரில் கடந்த மாதம் 12-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்த நிலையில் வேலூா் மத்திய சிறையில் இருந்து ஈசன் முருகசாமி வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

சிறையிலிருந்து வெளியே வந்த ஈசன் முருகசாமியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாலை அணிவித்து வரவேற்றனா். பின்னா், தொரப்பாடி எம்ஜிஆா் சிலை வரை பேரணியாக சென்றனா். அப்போது, தமிழக அரசு பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினா்.

பின்னா், ஈசன் முருகசாமி செய்தியாளா்களிடம் கூறியது -

40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் காா்ப்பரேட் நிறுவனங்களிடம் கூலிக்காக கோழி வளா்த்து வருகின்றனா். கூலி உயா்வு கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் இவா்களை அரசும், நிறுவனங்களும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜன., 1 முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்தோம். இதற்காக போராடிய எங்கள் மீது ஒரே மாதிரி 5 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

விவசாயிகள் போராடக்கூடாது, பொதுமக்கள் போராடக் கூடாது என்பதுதான் திமுக அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதால் விவசாயிகளை ஒருபோதும் அடக்க முடியாது. வளா்ப்பு கோழி கிலோவுக்கு ரூ.20 வழங்க வேண்டும், அவா்களின் அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com