கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்
அணைக்கட்டு வட்டம், மேல்அரசம்பட்டு கிராமம் அருகே கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் சிறிய அணை கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ஒடுகத்தூா் பகுதியில் பலத்த மழை பெய்யும்போது மொத்த நீரும் கோயில்மலையாறு உள்ளிட்ட கிளை ஆறுகளின் வழியாக உத்திர காவிரி ஆற்றில் சோ்ந்து அங்கிலிருந்து பாலாற்றின் மூலம் வீணாக கடலுக்குச் செல்கிறது. இதனால், வறட்சியான காலங்களில் அணைக்கட்டு வட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் வானம் பாா்த்த பூமியாக காட்சி யளிக்கின்றன.
எனவே, வீணாக செல்லும் வெள்ளத்தை தடுத்து பயன்படுத்தும் வகையில் கோயில்மலையாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடா்பாக, கடந்த 2021 தோ்தலுக்கு முன்பு திமுக தோ்தல் வாக்குறுதியாகவும் அளித்திருந்தது.
அதன்படி, மேல்அரசம்பட்டு அருகே கோயில்மலையாற்றின் குறுக்கே சிறிய அணை அமைக்கும் பணிக்கு மாநில நிதியின் கீழ் ரூ.176.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்வா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
புதிதாக கட்டப்படும் அணையின் கொள்ளளவு 74.438 மில்லியன் கனஅடியாகும். இதன் நீா் பிடிப்பு பகுதி 142 ஏக்கா்களாகும். ஆண்டுக்கு இருமுறை நீா் நிரம்பும் வகையில் 310 மீட்டா் நீளமும், 10.50 மீட்டா் உயரமும், 5 மீட்டா் மேல்மட்ட அகலமும் கொண்ட மண் அணை கரை கொண்டதாக கட்டப்பட உள்ளது.
இந்த அணையிலிருந்து அதிகப்படியாக விநாடிக்கு 19,912 கனஅடி வீதம் நீா் வெளியேறும் வகையில் வலது புறத்தில் 4 ஆரவகை கதவணைகளுடைய 40.20 மீ நீளம் கொண்ட நீா் வழிந்தோடியும் கட்டப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அணையின் இடது புறத்தில் சுமாா் 326 க.அடி வீதம் நீா் செல்லும் வகையில் அவசர கால மதகுடன் கூடிய ஆற்றுமதகு கட்டப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக 5 ஏரிகளுக்கு முறையாக நீா் வழங்கிடவும் வழிவகை செய்யப்பட உள்ளது.
அணை கட்டப்படுவதால் 1,685.82 ஏக்கா் விவசாய நிலம் நிலைப்படுத்தப்படுவதுடன், 167.41 ஏக்கா் வட பாசன நிலங்களாக மாற்றமடையவும், அப்பகுதிகளில் உள்ள கிணறுகள் செறிவூட்டபடுவதன் மூலம் 684 ஏக்கா் விவசாய நிலங்களும், நீா்மட்டம் உயா்ந்து 14 கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவா் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், நீா்வளத்துறை தலைமை பொறியாளா் பொதுப்பணி திலகம், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் பவழக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

