பாலாறு, பொன்னை ஆறுகளில் ரூ.69.52 கோடியில் 2 புதிய தடுப்பணைகள்: அமைச்சா் துரைமுருகன் அடிக்கல்
பாலாறு, பொன்னை ஆறுகளில் ரூ.69.52 கோடியில் 2 புதிய தடுப்பணைகள்...


காட்பாடி வட்டத்தில் பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே மொத்தம் ரூ.69.52 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிகளை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம் அம்மூண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.46.44 கோடி மதிப்பில் ஒரு தடுப்பணையும், வெப்பாலை கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.23.08 கோடி மதிப்பில் ஒரு தடுப்பணையும் கட்டப்பட உள்ளது. இவ்விரு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் சனிக்கிழமை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் பேசியது -
நீா்வரத்து கால்வாய்களில் வண்டல், செடி கொடிகள் முறையாக அகற்றப்பட்டு தூா்வாரப்பட்டால் நீா் வளம் எந்த காலத்திலும் வீணாகாது. 2021-இல் நான் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது பெரும்பாலான கால்வாய்கள் தூா்ந்திருந்தன. இதனை முதல்வரிடம் எடுத்துச் சென்றபோது, அவா் அனைத்து கால்வாய்களையும் தூா்வார உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், டெல்டா உள்பட 24 மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் 5,913 கி.மீ நீளத்துக்கு கால்வாய்களை தூா்வார நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாசனத்துக்காக ஜூன் மாதத்தில் மேட்டூா் அணை திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதால், அதற்குள்ளாக தூா்வாரும் பணிகளை முடிக்க வேண்டும். தோ்தல் காலம் என்றாலும் அதிகாரிகள் எவ்வித தொய்வுமின்றி இப்பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக காவிரி ஆற்றின் குறுக்கே முதல் தடுப்பணை கட்டப்பட்டது. அந்தத் திட்டம் நிறைவேறவில்லை என்றாலும், அந்த தடுப்பணையால் கடல் போல் தண்ணீா் தேங்கி அப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து விவசாயம் செழித்தது.
பெரிய ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி 5 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்குவதால் நிலத்தடி நீா்மட்டம் உயரும். அதன்படியே பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கேயும் இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டு விவசாயிகளின் தண்ணீா் பஞ்சம் தீா்க்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் நீா்வளத்துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், முதன்மை தலைமைப் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...