வேலூா் சிஎம்சி மருத்துவா் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

வேலூா் சிஎம்சி மருத்துவா் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
Updated on

வேலூரில் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து 27 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த பெல்கிங், வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் குடியிருப்பில் தங்கி, சிஎம்சி மருத்துவனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டில் மேலும் 4 மருத்துவா்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், அவா்கள் தலைமறைவாகிவிட்டனா்.

இந்த நிலையில், சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து 7 அதிகாரிகள் எல்லை பாதுகாப்புப் படை போலீஸாருடன் வெள்ளிக்கிழமை வேலூா் வந்தனா். அவா்கள் மருத்துவா் பெல்கிங் வீட்டின் கதவை உடைத்து சோதனையில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சனிக்கிழமை காலை 11 மணி வரை சுமாா் 27 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அப்போது, அங்கிருந்து போதைப் பொருள்களை கைப்பற்றினா்.

இதுதொடா்பாக, அவா்கள் வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தபோது, போலீஸாா் அதை வாங்க மறுத்து, காட்பாடியிலுள்ள போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பினா். ஆனால் அங்கு, ஒரு கிலோவுக்கு மேல் போதைப் பொருள்கள் இருந்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய முடியும் எனக் கூறி அமலாக்கத் துறை அதிகாரிகளைத் திருப்பி அனுப்பியதாக் தெரிகிறது.

இதையடுத்து மீண்டும் அமலாக்கத் துறையினா், வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்று, பண மோசடி தொடா்பாக மருத்துவா் பெல்கிங் வீட்டில் சோதனை நடத்தியபோது, 33 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com