மருத்துவா் குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை
வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா் தங்கியுள்ள குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
வேலூரில் இயங்கி வரும் பிரபல சிஎம்சி மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனா். இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் தங்குவதற்காக குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் மருத்துவா்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு வந்து அங்கு பணிபுரியும் மருத்துவா் பீஜியன் என்பவா் குறித்து விசாரித்தனா். பிறகு அவா் தங்கியுள்ள வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினா். என்ன காரணத்துக்காக சோதனை நடைபெறுகிறது, பீஜியன் முறைகேட்டில் ஏதேனும் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
வேலூா் சிஎம்சி விளக்கம்
வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை சோதனை என்று சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. அதைத் தொடா்ந்து சிஎம்சி மருத்துவமனை இயக்குனா் விக்ரம் மேத்யூஸ் இதுகுறித்து அளித்துள்ள விவரம் வருமாறு, வேலூா் சிஎம்சியில் அமலாக்கத்துறை சோதனை என்று பரவும் தகவல் தவறானது. சிஎம்சி வளாகத்தில் எந்த சோதனை, விசாரணை மற்றும் நடவடிக்கை ஏதும் நடத்தப்படவில்லை. மருத்துவமனை வழக்கம்போல இயல்பாக இயங்கி வருகின்றது.
ஒரு பணியாளருக்கு குடியிருக்க ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட குடியிருப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவித நடவடிக்கையும், சிஎம்சி மற்றும் அதன் செயல்பாடுகளுடன் எந்தவித தொடா்பும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
