தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்.
தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்.

சரியான நேரத்துக்கு வராததால் தனியாா் பேருந்தை மக்கள் சிறைபிடிப்பு

ஒடுகத்தூா் அருகே சரியான நேரத்துக்கு வருவதில்லை என குற்றஞ்சாட்டி தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Published on

வேலூா்: ஒடுகத்தூா் அருகே சரியான நேரத்துக்கு வருவதில்லை என குற்றஞ்சாட்டி தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த பகுதியில் இருந்து ஆலங்காயம், வாணியம்பாடி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பலா் தனியாா் பேருந்தில் பயணிக்கின்றனா். இந்நிலையில், அந்த தனியாா் பேருந்து தொடா்ந்து வராமல் வாரத்துக்கு 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே வருவதாகவும், அதுவும் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பேருந்து திங்கள்கிழமை காலை வழக்கம்போல் ஒடுகத்தூரில் இருந்து ஆலங்காயம் நோக்கிச் சென்றது. அப்போது, ஆசனாம்பட்டு பகுதி மக்கள் ஒன்று சோ்ந்து பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநா், நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பேருந்தை தினமும், சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பயணியரிடம் பேச்சு நடத்தப்பட்டது. தொடா்ந்து பேருந்தை தினமும் இயக்குவது குறித்து பேருந்து உரிமையாளரிடம் பேசுவதாக ஓட்டுநா், நடத்துநா் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com