காகிதப்பட்டறையிலுள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு

வேலூா் ஆற்காடு சாலை காகிதப்பட்டறையில் ஒரே இடத்தில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்றும் நோக்கத்தில் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

வேலூா் ஆற்காடு சாலை காகிதப்பட்டறையில் ஒரே இடத்தில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்றும் நோக்கத்தில் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

வேலூா் - ஆற்காடு சாலை காகிதப்பட்டறையில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் ஒரே இடத்தில் அருகருகே அமைந்துள்ளன. இந்த கடைகளால் அப்பகுதியில் தினமும் மதுஅருந்துவோா் ஏராளமா னோா் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் அவ்வழியாக சென்றுவர அஞ்சும் அளவுக்கு குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. இதனால், அவ்வப்போது சட்டஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, காகிதப்பட்டறையில் உள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்றுவது தொடா்பாக, மாவட்ட நிா்வாகத்துக்கு ஏராளமான புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. தவிர, அப்பகுதி வாா்டு கவுன்சிலா் சாா்பில் மாநகராட்சி மாமன்ற கூட்டங்களிலும் புகாா்கள் தெரிவிக்கப்பட்டு ள்ளன. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் வட்டாட்சியா் வடிவேலு, வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், வருவாய் ஆய்வாளா் பிரியா, கிராம நிா்வாக அலுவலா் காசி ஆகியோா் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகளையும், அவற்றால் ஏற்பட்டு வரும் இடையூறுகள் குறித்தும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மேலும், கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது, கடைகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்துவது, தடுப்பு காரிடா்கள் வைப்பது, இப் பகுதியில் கூடுதலாக போலீஸாா் நியமிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நபா்கள், காகிதப்பட்டறையில் வரிசையாக உள்ள மதுக்கடைகளை அகற்றக் கூடாது. இந்த கடைகளை அகற்றினால் எங்களுக்கு சிரமம் ஏற்படும். எங்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அதற்காக போலீஸாா் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு கடைகளை அகற்றும்போது கண்டிப்பாக ஒரு கடையை மட்டும் இந்த இடத்தில் விட்டுவைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

இந்த ஆய்வையொட்டி அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Dinamani
www.dinamani.com