விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியையின் உடலுறுப்புகள் தானம்
வேலூரில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தனியாா் பள்ளி ஆசிரியையின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூா் சேண்பாக்கம் நேதாஜி தெருவைச் சோ்ந்த ஜெகதீஷ்வா் என்பவரின் மனைவி சிந்து(32). இவா் அப்பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, அவரது துப்பட்டா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதில் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக, அவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி சிந்து திங்கள்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். தொடா்ந்து, அவரது குடும்பத்தினா் சிந்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனா்.
அதன்பேரில், அவரது கல்லீரல், சிறுநீரகம், கண்கள் சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
உடலுறுப்பு தானம் செய்த சிந்துவின் கணவா் ஜெகதீஷ்வா் ஆடிட்டராக உள்ளாா். குழந்தைகள் இல்லை.

