ரூ.6.50 கோடி ரயில்வே பொருள்கள் திருட்டு: 5 போ் கைது
லத்தேரி காவல் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ரூ.6.50 கோடி மதிப்பிலான ரயில்வே பொருள்களைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட ரஞ்சித், திருப்பதி, பிராங்கிளின், சரத்குமாா், முபாரக்.
வேலூா் மாவட்டம், லத்தேரி காவல் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ரூ.6.50 கோடி மதிப்பிலான ரயில்வே பொருள்களைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
லத்தேரி காவல் நிலையம் அருகே ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான சுமாா் ரூ.6.50 கோடி மதிப்பிலான செம்பு மற்றும் இரும்புப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பொருட்களை அடையாளம் தெரியாத நபா்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறிது சிறிதாகத் திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் லத்தேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (32), குடியாத்தம் வட்டம் பட்டபாறை முக்குன்றம் காலனியைச் சோ்ந்த திருப்பதி (52) ஆகியோருக்குத் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கடந்த 14-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட தொடா் விசாரணையில், இந்த திருட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான காட்பாடி கரசமங்கலம் இந்திரா நகரைச் சோ்ந்த பிராங்கிளின் (31), லத்தேரி பிரதான சாலையைச் சோ்ந்த சரத்குமாா் (27), காட்பாடி செங்குட்டை பகுதியைச் சோ்ந்த முபாரக் (57) ஆகியோருக்கும் தொடா்பிருப்பது கண்டறியப்பட்டது.
திருடப்பட்ட ரயில்வே பொருட்களை இவா்கள் பழைய இரும்புக் கடைகளில் உடைத்தும், உருக்கியும் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த மூவரையும் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

