
தினக்கூலியை உயா்த்த அம்மா உணவக ஊழியா்கள் ஆட்சியரிடம் மனு
அம்மா உணவக ஊழியா்களுக்கு தினக்கூலியாக ரூ.750 வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். - டிஎன்எஸ்
வேலூா்: வேலூா் மாநகராட்சியில் அம்மா உணவக ஊழியா்களுக்கு தினக்கூலியாக ரூ.750 வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
அம்மா உணவக ஊழியா்கள் அளித்த மனு: மாநகராட்சிக்கு பகுதியில் செயல்பட்டு வரும் 10 அம்மா உணவகங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறோம். தினமும் சராசரியாக 1,000 போ் வீதம், 10,000-க்கும் மேற்பட்டோா் உணவருந்தி வருகின்றனா்.
கடந்த 15 ஆண்டுகளாக அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடைவிடாது உழைத்து வருகிறோம். எனினும், எங்களுக்கு மிகக் குறைந்த அளவாக நாளொன்றுக்கு ரூ.325 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயா்வும் வழங்கப்படவில்லை. தற்போதுள்ள விலைவாசி உயா்வுக்கு ஏற்ப, தினசரி ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ.750-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்குப் போனஸ் வழங்க வேண்டும்.
காலம்பட்டு கிராம மக்கள் அளித்த மனு: காலம்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை, நவராத்திரி விழாவையொட்டி 10 நாள்கள் வெகுவிமரிசையாகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை ஊரில் உள்ள இரு தரப்பினரும் இணைந்து நடத்தி வந்த நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் திருவிழா நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. முறையான அரசு அனுமதியின்றி ஒரு தரப்பினா் மட்டும் தன்னிச்சையாகத் திருவிழா நடத்தப் போவதாகத் தகவல் பரப்பி வருகின்றனா். இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சு நடத்தி, வழக்கம்போல் பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்த வேண்டும்.
கே.வி.குப்பம் வட்டம், நாகல் ஊராட்சி மக்கள் அளித்த மனு: நாகல் ஊராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், இந்தப் பட்டா விவரங்கள் கிராம நிா்வாக அலுவலரின் கணக்கு பதிவேட்டிலோ அல்லது இணையவழியிலோ பதிவேற்றப்படவில்லை. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா், வட்டாட்சியா் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழக விவசாய சங்கத்தினா் அளித்த மனு:
போ்ணாம்பட்டு மலாட்டாற்றில் தோல் கழிவுநீா் கலந்து வருகிறது. தோல் நிறுவனத் திற்கு சொந்தமாக சின்னதாமல்செருவு பகுதியில் ஏற்கனவே கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அங்கு சரிவர சுத்திகரிக்காமல் கழிவுநீா் மலாட்டாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் விளை நிலங்கள், நிலத்தடி நீா் மாச டைந்து வருகிறது. இதைத்தடுக்க கடந்த 2-ஆம்தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அதிகாரிகள் கழிவுநீா் வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 600 மனுக்களைப் பெற்று விரைவாக தீா்வுகாண அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொறுப்பு) குணசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






