கால்களால் கம்ப்யூட்டரை இயக்கும் இளைஞர்!

உதகை,அக். 9  ஊனம் என்பது உடலில்தான், உள்ளத்தில் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இரு கைகளும் இல்லாத ஒரு இளைஞர் கால்களாலேயே கம்ப்யூட்டரை இயக்கி வருகிறார்.   உதகை மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திர
Updated on
1 min read

உதகை,அக். 9  ஊனம் என்பது உடலில்தான், உள்ளத்தில் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இரு கைகளும் இல்லாத ஒரு இளைஞர் கால்களாலேயே கம்ப்யூட்டரை இயக்கி வருகிறார்.

  உதகை மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(33). பிறப்பிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பிரச்னைகளோடு பழக்கப்பட்டுவிட்ட இவர் தனது உடல் ஊனத்தை நினைத்து கலங்காமல் தானும் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற உறுதியை மட்டும் வளர்த்துக் கொண்டுள்ளார்.

  இவரது 6 வது வயதில் இவரது நிலையைப் பார்த்த அருகிலுள்ள பள்ளி ஆசிரியை ஏஞ்சலா, கைகள் இல்லாவிட்டால் என்ன, கால்களால் எழுதி படிக்கக்கூடாதா? என்ற ஆசையை வளர்த்துள்ளார். அதன்பேரில் பள்ளிக்குச் சென்ற மகேந்திரன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கால்களாலேயே எழுதக் கற்றுக் கொண்டதோடு, புத்தகத்தின் பக்கங்களையும் திறந்து படிக்கப் பழகிக் கொண்டார்.

  அந்த ஆர்வத்திலேயே உதகையில் புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேறி, உதகை அரசு கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பிலும் சேர்ந்துள்ளார். இதற்கிடையே டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள நினைத்து கால்களாலேயே தட்டச்சு இயந்திரத்திலும் பணியாற்றப் பழகினார். இதன் காரணமாக கம்ப்யூட்டர் கல்வியை கற்க நினைத்தபோது உடனடியாக அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

  பின்னர், குன்னூரிலுள்ள லட்சிய மக்கள் கூட்டமைப்பினர் உதவ முன்வந்து ஒரு கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்திலும் சேர்த்துவிட்டனர். ஆனால், மவுசை இயக்க முடியாமல் திணறிய இவர், காலப்போக்கில் அதையும் கையாள கற்றுக்கொண்டு தற்போது கம்ப்யூட்டர் பயிற்சியில் டிப்ளமோ முடித்துள்ளார்.

  தொடர்ந்து தனது விடா முயற்சி காரணமாக அரசு வேலைக்கு முயற்சித்தபோது இவருக்கு ஏளனங்கள்தான் பரிசாகக் கிடைத்துள்ளது.

  அதன்பின்னர் ஒரு பிரவுசிங் சென்டர் வைப்பதற்காக தனக்கு வங்கி கடனுதவி வழங்கக்கோரி தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு, உதகைக்கு விசாரணைக்கு வந்தபோது மாவட்ட உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையில் உதவி ஏதும் செய்யவில்லை.

  தனது கோரிக்கைகளுக்காக கடந்த 8 ஆண்டுகளாக முயற்சித்துவரும் மகேந்திரன், உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு மனுநீதி நாளில் தனது குமுறல்களை தெரிவித்தார். உடல் ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டில் தனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை பரிசீலித்து தேவையான உதவிகளை செய்வதாக ஆட்சியர் ஆனந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

  தாயில்லாத நிலையில் தனது இரு தம்பிகளும், ஒரு தங்கையும் திருமணமாகிச் சென்று விட்ட பின்னர் 57 வயதான தந்தையை வைத்துக் கொண்டு எதிர்காலத்தை நினைத்து கை இல்லாவிட்டாலும், காலைக் கொண்டு உழைத்து முன்னேறத் துடிக்கும் இந்த ஊனமுற்ற இளைஞருக்கு அரசின் உதவிக்கரம் நீள வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com