"குருதட்சிணை'

 ராசிபுரம், செப். 2: "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற புனிதமான வரிசையில் ஆசிரியருக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், மதிப்பிலும் மரியாதையிலும் எல்லோரையும் முந்திக் கொண்டு நிற்பது குரு தான்.
Updated on
2 min read

 ராசிபுரம், செப். 2: "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற புனிதமான வரிசையில் ஆசிரியருக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், மதிப்பிலும் மரியாதையிலும் எல்லோரையும் முந்திக் கொண்டு நிற்பது குரு தான். அப்படிப்பட்ட குருவுக்கு முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொடுத்துள்ள "தட்சிணை' மெய்சிலிர்க்க வைக்கிறது.

 50 ஆண்டுகள் கழிந்தும் தங்களுக்கு தமிழ் அறிவு ஊட்டிய தமிழாசிரியரை முன்னாள் மாணவர்கள் மறக்காமல் இருந்தது அந்த ஆசிரியர் செய்த புண்ணியம் தான்.

 "ஏகலைவன்களாக' மாறி முன்னாள் மாணவர்கள் நடத்தி முடித்துள்ள "நன்றிக்கடன்', இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு சிறந்த கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு எங்கும், எப்போதும் மதிப்பு மங்காது என்பதற்கும் இதைவிட சிறந்த உதாரணம் இருக்க வாய்ப்பில்லை.

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1954-ம் ஆண்டு முதல் 31 ஆண்டுகள் சிறந்த தமிழாசிரியராக இங்கு பணியாற்றி 1985-ல் ஓய்வு பெற்றவர் சோ.வே. வெங்கட்ராமன்.

 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனாபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட வெங்கட்ராமன், ராசிபுரத்தில் தங்கியிருந்து சிறிய கிராமமான நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் குருசாமிபாளையம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

 தாய்மொழியாம் தமிழ் மொழியை இலக்கணத்தோடு போதித்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் நலனிலும் அன்பு கலந்த அக்கறை காட்டி கல்வி போதித்ததால் அனைவரையும் கவர்ந்த ஆசிரியராக இவர் திகழ்ந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மேலும் ஊர் முன்னேற்றத்திலும், ஆன்மிகப் பணிகளிலும் அதீத அக்கறை காட்டியதால் ஊர் மக்களின் ஒட்டுமொத்த மனங்களிலும் இவருக்கு கௌரவமான இடம் உண்டு.

 வெங்கட்ராமன் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இவரிடம் பயின்ற மாணவர்கள், இன்று தொழிலதிபர்களாகவும், அரசு உயரதிகாரிகளாகவும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால், "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளுக்கேற்ப தாயின் ஸ்தானத்தில் இருந்த தமிழாசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள் தந்துள்ள "தட்சிணை' கொஞ்சம் வித்தியாசமானது தான்.

 ரூ.10 லட்சத்தில் வீடு

 ராசிபுரம் எல்லப்ப செட்டியார் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வரும் தமிழாசிரியர் சோ.வே. வெங்கட்ராமன் நிலை அறிந்த முன்னாள் மாணவர்கள், அவருக்கு சொந்தமாக வீடு கட்டித்தர முடிவு செய்தனர். இதன்படி, ரூ.10 லட்சம் செலவில் குருசாமிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியில் வீடு கட்டி முடித்துள்ளனர்.

 "குரு நிவாஸ்' திறப்பு விழா

 இந்த வீட்டை ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தமிழாசிரியர் சோ.வே. வெங்கட்ராமன் பெயரில், "தான செட்டில்மெண்ட்' படி பத்திரம் பதிவு செய்துள்ளனர் முன்னாள் மாணவர்கள். இந்த வீட்டின் பெயர் "குரு நிவாஸ்'. செப். 4-ம் தேதி கிரஹப்பிரவேசம் செய்து, ஆசிரியர் கையில் சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். ரூ.10 லட்சம் செலவில் குருவுக்கு தட்சிணையாக வீடு வழங்கும் முன்னாள் மாணவர்களின் இச் செயல் அப்பகுதி பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

 தமிழாசிரியர் வெங்கட்ராமனை போலவே எல்லா ஆசிரியர்களும் மாணவர்கள் நலனில் "உண்மையான' அக்கறை காட்டினால் நம் பாரத தேசம் உலக அரங்கில் இன்னும் உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com