வாழும் செம்மொழி தமிழ்!

 கோவை, செப். 13: மற்ற செம்மொழிகளைப் போல் இல்லாமல் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ள வாழும் செம்மொழியாக தமிழ் திகழ்கிறது என்று சென்னை செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மைய இயக்குநர் க.ராமசாமி கூற
Updated on
1 min read

 கோவை, செப். 13: மற்ற செம்மொழிகளைப் போல் இல்லாமல் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ள வாழும் செம்மொழியாக தமிழ் திகழ்கிறது என்று சென்னை செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மைய இயக்குநர் க.ராமசாமி கூறினார்.

 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சன்மார்க்க சங்கத்தில் நடந்த இம் மாநாட்டுக்கு மன்றத் தலைவர் பெ.சிதம்பரநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்து, செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மைய இயக்குநர் க.ராமசாமி பேசியது:

 தொன்மை, தனித்தனிமை கொண்ட மொழிகள் செம்மொழி அந்தஸ்தைப் பெறுகின்றன. அந்த வகையில், கிரேக்கம், லத்தீன், சீனம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன. தற்போது தொன்மைவாய்ந்த தமிழ் மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்கு மொழியியல் நீண்டகால வரலாறு உள்ளது. அதற்கான ஆதாரங்களை மொழியியல் நிபுணர்கள் வைத்துள்ளனர்.

 பழமையான மொழியாக தமிழ் இருந்தாலும், அதன் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் தமிழ் அரசர்களுக்கு இடையே நடந்த போர்களால் அழிக்கப்பட்டன. இருப்பினும், தொல்காப்பியம் போன்ற நூல்கள் தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக்காட்டுகின்றன.

 பேச்சு வழக்கில் இருந்து மறைந்துவிட்ட சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை நிதியாக மத்திய அரசு வழங்குகிறது.

 அந்த மொழிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.

 மற்ற செம்மொழிகளைப் போல் இல்லாமல், இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ள சிறந்த செம்மொழியாக தமிழ் திகழ்கிறது.

 உலக நாடுகள் முழுவதும் தமிழர்கள் பரவி இருக்கிறார்கள். ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தமிழர்கள் சிறுபான்மையினராகத்தான் உள்ளனர்.

 மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று அதிகமாக உள்ளது. தமிழ் மொழியை பாதுகாப்பதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.

 தமிழை அழிவில் இருந்து காப்பாற்ற லட்சக்கணக்கான இலங்கை அப்பாவித் தமிழர்கள், தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். தமிழைக் காப்பதற்கான அவர்களது போராட்டம் இன்றளவும் தொடர்கிறது என்றார்.

 கரூர் மாவட்ட துணை ஆட்சியர் வெ.சுப்பிரமணியம், கவிஞர் புவியரசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலர் ப.பா.ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com