குளு குளு உதகையில் குவிகின்றனர் சுற்றுலாப் பயணிகள்

உதகை, ஏப். 21:  தமிழகத்தின் பிற பகுதிகளிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தகிக்கும் வெயிலால் இதமான காலநிலையைத் தேடி உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ம
Updated on
2 min read

உதகை, ஏப். 21:  தமிழகத்தின் பிற பகுதிகளிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தகிக்கும் வெயிலால் இதமான காலநிலையைத் தேடி உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 மலைகளின் அரசி எனப்படும் நீலகிரியில், குறிப்பாக உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. உதகையில் குதிரைப் பந்தயம் தொடங்கும் ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து, ஜூன் மாத இறுதியில் குதிரைப் பந்தயம் முடியும் வரையிலான காலமே சீசன் காலமாகும். இந்த இரண்டு மாத காலத்தில் மே மாதம்தான் முக்கிய சீசன் மாதமாகும்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெப்பத்தில் நடப்பாண்டில் மார்ச் மாதத்திலேயே கோடை வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக குளிர்ச்சியைத் தேடி நீலகிரிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அப்போதிருந்தே தொடங்கி விட்டது. இது நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உதகைக்கு சுமார் 1.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் அரசினர் தாவரவியல் பூங்காவை பார்க்க தவறுவதில்லை. ஆனால், தற்போது இப்பூங்காவில் மலர்கள் இன்னமும் முழுமையாக பூக்காத நிலை உள்ளது. அத்துடன் அரசினர் தாவரவியல் பூங்காவைத் தவிர வேறு ஏதாவது புதிய இடங்களுக்குச் செல்ல நினைத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகின்றனர்.

இதையும் தாண்டி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை 1.60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டிலும் இதே அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். ஆனால், கடந்தாண்டில் இப்பூங்காவில் நுழைவுக் கட்டணம் சிறியவர்களுக்கு ரூ.5ம், பெரியவர்களுக்கு ரூ.10மாக வசூலிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் சிறியவர்களுக்கு ரூ.10ம், பெரியவர்களுக்கு ரூ.20ம் வசூலிக்கப்படுகிறது.  நுழைவுக் கட்டணம் இரு மடங்காக அதிகரித்துள்ள போதிலும் அதே அளவிலான சுற்றுலாப் பயணிகள் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வந்து சென்றுள்ளனர் என்றால் அதற்கு உதகையில் நிலவும் இதமான தட்ப வெப்ப நிலையே காரணமாகும்.

உதகையில் தற்போது பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரியாகவும் உள்ளது. தற்போதைய சூழலில் மாநிலத்தின் எந்த பகுதியிலும் நினைத்துப் பார்க்க முடியாத தட்பவெப்ப நிலை இதுவாகும். இதுவே கடந்த ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரியாகவும் இருந்துள்ளது.

அத்துடன் உதகை சீசன் என்றாலே பகலில் பெய்யும் கோடை மழைதான் முக்கிய அம்சமாகும். காலை முதல் பகல் வரை வெயிலும், பகலில் சுமார் 2 மணி நேரத்திற்கு மழையும், அதையடுத்து மாலையில் இதமான காலநிலையும், இரவில் லேசான குளிரும் இருப்பதுதான் உதகையின் சீசன் கிளைமேட். இதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் இந்த தட்பவெப்ப நிலைகளில் அதிகளவில் மாற்றங்கள் ஏதுமில்லை.

கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் முதல் 20 நாட்களில் 16.2 மி.மீ. மழை மட்டும் பெய்திருந்த நிலையில் நடப்பாண்டில் 62 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் தினந்தோறும் மழை பெய்து வருவதால் அடுத்துவரும் நாட்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வறட்சியின் காரணமாக மூடப்பட்டுள்ள முதுமலை புலிகள் காப்பகமும் இந்த தொடர் மழையின் காரணமாக மே மாதம் 1ம் தேதியிலிருந்து மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

 எனவே, உதகையில் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதற்கு அதிகளவில் இடங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாவிட்டாலும், உதகையில் நிலவும் இதமான தட்ப வெப்பநிலையே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரதான அம்சமாக உள்ளது எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com